பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று முதல் மாற்றி அமைத்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபடியே இருக்கிறது. ஆனால், அவற்றின் பலனை அப்படியே நுகர்வோருக்கு முழுமையாக வழங்காமல், இந்திய எண்ணெய் கழகம், இந்திய மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
கடந்த 15 ஆண்டுகளில் எத்தனை முறை பெட்ரோல், விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்:
சந்தையில் நிலவும் ஸ்திரமற்ற நிலை, கச்சா எண்ணெய் விலையில் நிலவும் ஏற்ற-இறக்க விலை நிலவரம், அரசியல் ஸ்திரமற்ற சூழல் மற்றும் சர்வதேச பொருளாதார தடை ஆகியவைதான் ஒரு நாட்டின் பொருளாதார பின்னடைவுக்கும், வீழ்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது.
அந்த வகையில் பார்க்கும்போது, நம் இந்தியாவிற்கு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய சவாலாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது பதுக்கலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான்.
ஒரு விளைப்பொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலையைவிட, அதை ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக ஆகும் வாகனத்திற்கான எரிபொருள் செலவு பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் விலைவாசி உயர்வு நாளுக்கு, நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால்,15 நாட்களுக்கு ஒருமுறை பேரூந்து மற்றும் மோட்டார் வாகனங்களின் கட்டணத்தையும், வாடகையையும் மாற்றி அமைக்க முடியுமா? இதை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் கொஞ்சம் மனச்சாட்சியோடு சிந்தித்து பார்க்க வேண்டும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், உயராவிட்டாலும், ஆண்டிற்கு ஒரு முறை அமைச்சரவையை கூட்டி, மக்களின் நலனை மனதில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் எரிப்பொருள்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஒரு அரசாங்கம் மக்களுக்கு சேவை மனபான்மையோடுதான் செயல்படவேண்டுமே தவிர, வணிக நோக்கத்தோடு அனைத்து துறைகளிலும் லாபம் ஈட்ட நினைக்கக்கூடாது. அப்படி நினைத்தால் வியாபாரிக்கும், அரசாங்கத்திற்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்.
வளர்ச்சி என்பது மக்களின் மகிழ்ச்சியை மையமாக வைத்து கணக்கிட வேண்டும். மக்களின் மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் இடையூறாக செய்யப்படும் எந்த காரியமும் அரசப்பயங்கரவாதமாகதான் கருதப்படும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com