காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழு அமைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

jj

pr050915_431pr050915_4312தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றம் 05-02-2007-ல் வெளியிட்ட இறுதி தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு குறிப்பிட்ட காலத்தில் சரியாக காவிரி நீர் திறந்து விடுவதில்லை என்பதை உங்களுடைய மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர அடிப்படையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அவ்வாறு உரிய தண்ணீர் திறந்து விடாததால் வழக்கமான காலகட்டமான ஜூன் 12-ந்தேதி இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை.

09-08-2015 அன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது 60.411 டி.எம்.சி. தான் தண்ணீர் இருந்தது. இதன் மூலம் ஒரு போக சம்பா சாகுபடிக்கு மட்டுமே தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது. ஜனவரி 2016 வரை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடவேண்டி உள்ளது.

04-09-2015 அன்றைய கணக்குப்படி 50.552 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்தது. தண்ணீர் வரத்தும் மிகவும் குறைந்து விட்டது. அதே நேரத்தில் கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான தண்ணீர் இருக்கிறது. அவற்றின் மூலம் ஜூலை மாதம் முதல் தங்கள் பகுதி பாசனத்திற்கு திறந்து விடுகின்றனர்.

நடுவர் மன்ற தீர்ப்பின்படி இதுவரை பில்லிகுண்டுலுக்கு 94 டி.எம்.சி. தண்ணீர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 31-08-2015 வரை 66.443 டி.எம்.சி. தண்ணீர் தான் வந்துள்ளது. அதாவது 27.557 டி.எம்.சி. தண்ணீர் குறைவாக வந்துள்ளது.

சட்டப்படி எங்களுக்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் தொடர்ந்து அவர்களே பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தாங்கள் இதில் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு தரவேண்டிய 27.557 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும், நடுவர் மன்ற தீர்ப்பின்படி இனிவரும் மாதங்களில் தண்ணீர் வழங்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

அதே போல நான் தொடர்ந்து வற்புறுத்திய படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்கு முறை குழு அமைக்க வேண்டும். தமிழகத்தின் முக்கிய பிரச்சினையான இதில் உடனடியாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com