கள்ள சாராய விழிப்புணர்வு கூட்டம் ஏற்காட்டில் நடைப்பெற்றது.

Yercaud Conference

ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் பேசிய போது எடுத்த படம்

மதூர் கிராமம் ஏற்காட்டில் இருந்து  சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கள்ள சாரயம் காய்ச்சியதால் கைது செய்யப்பட்டனர்.

கள்ள சாரயம் காய்ச்சக் கூடாது என்பதனை வலியுறுத்தி, மதூர் கிராம சமுதாய நலக்கூடத்தில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்காடு காவல் துறை சார்பில் இன்று மாலை 05.00-க்கு நடைபெற்றது.  கூட்டத்திற்கு ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமை தாங்கி கிராமவாசிகளுக்கு  ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் பேசியதாவது: “இனி பொதுமக்கள் யாரும் கள்ள சாராயம் காய்ச்ச கூடாது, மீறி காய்ச்சி பிடிபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவீர்கள்.  அது மட்டுமின்றி கள்ளச் சாராயம் காய்ச்சிய இடத்தின் உரிமையாளர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு கிராமத்தினர் உறுதுணையாக இருக்காமல் காவல்துறையினர்க்கு தகவல் தெரிவிக்க வேண்டும், மேலும், வாரம் இருமுறை ஏற்காடு காவல் துறையினர் கிராமத்தில் சோதனையில் ஈடுபடுவார்கள்” இவ்வாறு கூறினார்.

மேலும் மதூர் கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர்களில் ரவி, மூக்கன், பழனிசாமி, மகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு கிராமத்தில் கள்ளச் சாராயம் குறித்து ஏற்காடு காவல் துறைக்கு தகவல் கொடுக்க உத்தரவிடப்பட்டது.

இக்கூட்டத்தில் ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் சின்னப்பன், தலைமை காவலர் முருகன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

-நவீன் குமார்.