சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்கா, போட்டுகாடு கிராமம் முதல், பாலிக்காடு கிராமம் வரை ஏற்பட்ட சாலை பிரச்சனை குறித்து, கிராம மக்களிடம் ஏற்காடு தாலுக்கா அலுவலகத்தில், ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணன் மற்றும் ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏற்காடு, பாலிக்காடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கேயே காபி உள்ளிட்ட பயிர்களை விளைவித்து தொழில் செய்து வருகின்றனர். இவர்களது அத்தியாவசிய தேவைக்கும், தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காகவும் அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போட்டுகாடு கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.
போட்டுகாடு மற்றும் பாலிக்காடு கிராமங்களுக்கு இடையே சாலை இல்லாமல் நடைபாதை மட்டும் அரசு பதிவுகளில் உள்ளவாறு பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இரு தனியார் எஸ்டேட்களின் நிலம் வழியாக கடந்த செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், நடைபாதையை பாலிக்காடு கிராமத்தினரே சாலையாக செப்பனிட்டனர்.
அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்கள் எஸ்டேட் வழியாக பொதுமக்கள் செல்வது மற்றும் சாலையை செப்பனிடுவதை தடுத்து ஏற்காடு வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்காடு வட்டாட்சியர் இருதரப்பினரையும் அழைத்து ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் அமைதி பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
-நவீன் குமார்.