வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவன்! விபத்தில் உயிரிழந்த உதவி தலைமை ஆசிரியர்!- அறந்தாங்கியில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்!  

லாரல் மேல்நிலைப் பள்ளி,குரும்பக்காடு, அறந்தாங்கி. புதுக்கோட்டை மாவட்டம்.

லாரல் மேல்நிலைப் பள்ளி,குரும்பக்காடு, அறந்தாங்கி. புதுக்கோட்டை மாவட்டம்.

Suganth lhaural school in aranthangi

மாணவன் சுகந்தன்.

மாணவன் சுகந்தன்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த குரும்பக்காடு பகுதியில் லாரல் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

கடந்த ஆண்டு +2 தேர்வில் மாவட்ட  அளவிலும், மாநில அளவிலும் இப்பள்ளி மாணவிகள் சாதனை  படைத்துள்ளனர். இதனால் ஆண்டு தோறும் மாணவ, மாணவிகளின் சேர்க்கை இப்பள்ளியில் அதிகரித்து வருகிறது.

தற்போது இப்பள்ளியில் 3,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும், இப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு என்று  தனித் தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. 

இந்த பள்ளியில் மணமேல்குடி ஒன்றியம் பயமறியானேந்தல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்-சுஜாதா தம்பதியரின் 2-வது மகன் சுகந்தன்(வயது 16) பிளஸ்-2 படித்து வருகிறார். அவர் பள்ளி விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார். இதேப்போல இவரது தம்பி முகிலனும், இதே பள்ளி விடுதியில் தங்கி, 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் 14.09.2015  (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில், உணவு சாப்பிடுவதற்காக மாணவர்கள் அனைவரும் சென்றனர். அப்போது மாணவன் சுகந்தன் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியில் சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர் மீண்டும் விடுதிக்கு திரும்பி வரவில்லை.

இதை தொடர்ந்து மாணவர்கள் உணவு உண்ட பின்பு, இரவு 10 மணியளவில் விடுதிக்காப்பாளர் தினேஷ், மாணவர்களின் வருகை பதிவேட்டை எடுத்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்வது வழக்கம். அதன்படி வருகையை பதிவு செய்தபோது மாணவன் சுகந்தனை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் இருந்துள்ளனர். உடனே, விடுதிக்காப்பாளர் விடுதி முழுவதும் சுகந்தனை தேடிப்பார்த்தார். 

லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாலசஞ்சீவி.

லாரல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பாலசஞ்சீவி.

இருப்பினும் விடுதி அறைகளில் சுகந்தனை காணாததால், இதுகுறித்து பள்ளியின் தாளாளர் பாலசஞ்சீவியிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே, அங்கு விரைந்து சென்ற பள்ளியின் தாளாளர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன், பள்ளி வளாகம் முழுவதும் தேடியுள்ளனர். 

லாரல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்   கோவிந்தசாமி.

லாரல் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தசாமி.

அப்போதும் சுகந்தன் கிடைக்காததால், மாணவன் சுகந்தன் மாயமான தகவலை, அவரது தந்தை சுப்பிரமணியனுக்கு தொலைபேசியில் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன், சுகந்தன் மாயமான தகவலை அறந்தாங்கியில் உள்ள தனது உறவினர்களிடம் கூறி பள்ளிக்கு உடனே சென்று, சுகந்தனை தேடுமாறு கூறினார். 

இரவு முழுவதும் பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் சுகந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் 15.09.2015  காலை 6 மணியளவில் சுகந்தன், வாய்,கன்னம் மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் பள்ளி வளாகத்திற்குள் நடக்க முடியாமல் நடந்து வந்தார்.

அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிசிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், விடுதியில் தங்கியிருந்த மாணவன் வெட்டப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதற்கு காரணமான விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பள்ளி வளாகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாணவனை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் சாலை மறியல் செய்ததால். வேறு வழியில்லாமல், பள்ளி நிர்வாகத்தினரை, அறந்தாங்கி போலிசார் விசாரனைக்காக அழைத்துச் சென்றனர்.

மதியம் முதல்கட்ட விசாரனை முடிந்த நிலையில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் நீலகண்டன் ஒரு மோட்டார் சைக்களில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது பள்ளி அருகே எதிரே வந்த லாரி மோதி படுகாயமடைந்தார். 

விபத்தில் உயிரிழந்த உதவி தலைமை ஆசிரியர் நீலகண்டன்.

விபத்தில் உயிரிழந்த உதவி தலைமை ஆசிரியர் நீலகண்டன்.

அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின், திருச்சிக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது பரிதாபமாக உயிரிழந்தார். 

அடுத்தடுத்து நடந்த துயர சம்பவங்கள் அறந்தாங்கியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

குழந்தைகளின் படிப்பிற்கு எந்த அளவிற்கு  முக்கியத்துவம் அளிக்கிறமோ, அதை விட பல மடங்கு குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், ஒழுக்கத்திற்கும் அவசியம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இயந்திரத் தனமான படிப்பு எந்த நன்மையும் தராது. விபரமறியாத பிள்ளைகளை விடுதியில் தங்கி படிக்க வைப்பதுதான் இது போன்ற விபரீதங்களுக்கு காரணம்.

பெற்றோர்களின் அரவணைப்பிலும், நேரடி கண்காணிப்பிலும் படிக்காதக் குழந்தைகள் விடுதியில் சேர்த்து விட்டால் மட்டும் எப்படி படிக்கும்? பெற்றோர்கள் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். 

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com