முடிவுக்கு வந்த 133 ஆண்டு கால பிரச்சனை!

??????????????????????????????????????????????????????????????

ஏற்காடு, பாலிக்காடு கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு 133 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் தங்கள் முயற்சியிலேயே 7 கிலோ மீட்டர் தூரத்தை சாலையாக சீர்ப்படுத்தினர்.

ஏற்காடு தாலுக்கா, போட்டுக்காடு கிராமத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பாலிக்காடு கிராமம். இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூர்வீகமாக வசித்து வருகின்றனர். இங்கு இவர்கள் சாமை, ஆரியம், காபி உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், தங்கள் குழந்தைகளின் தேவைகளுக்கும் 7 கிலோ மீட்டர் கரடு முரடான பாதையை பயன்படுத்தி போட்டுகாடு கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பாதையிலேயே விளைந்துள்ள பொருட்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் சுமந்து சென்றுள்ளனர்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டு வந்த காலத்திலேயே போட்டுக்காடு கிராமம் முதல் பாலிக்காடு கிராமம் வரை 9 அடி சாலை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த கரடு முரடான சாலையை அங்குள்ள தனியார் ஆக்கிரமித்து காபி பயிர்களை விளைவித்து வந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி பாலிக்காடு கிராமத்தினரும், மலையாளி பேரவையை சேர்ந்தவர்களும் இணைந்து தங்கள் பாலிக்காடு கிராமத்திற்கு சாலை அமைக்க முற்பட்டனர். அப்போது தனியார் எஸ்டேட்டை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் ஏற்காடு வட்டாட்சியர் சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் மற்றும் தனியார் எஸ்டேட்டை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சு வார்த்தை உடன்பாடின்றி முடிவடைந்தது.

இந்நிலையில் பாலிக்காடு கிராம மக்களும், மலையாளி பேரவையினரும் இணைந்து இன்று 7 கிலோ மீட்டர் தூரத்தை சாலையாக சீர்ப்படுத்தினர். அரசாங்கம் முன்வந்து இதை தார்சாலையாக மாற்றியமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். இதனால் 133 ஆண்டு கால பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

 -நவீன் குமார்.