உத்தரபிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் பிசோதா என்ற கிராமம் உள்ளது. கடந்த மாதம் 28–ந் தேதி அங்குள்ள ஒரு இஸ்லாமிய குடும்பத்தினர், பசுவை அடித்துக்கொன்று சமைத்து சாப்பிட்டதாக இந்து கோவிலில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு முகமது அக்லாக் (வயது 50) என்பவரது வீட்டுக்குள் புகுந்த 200 பேர் அடங்கிய கும்பல், அவரை அடித்துக்கொன்றது. அவரது 22 வயது மகன் டேனிசும் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பசுவின் இறைச்சி சாப்பிட்டதாக முகமது அக்லாக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சஞ்சய் ரானாவுடன் தொடர்பு உடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 23 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், பள்ளிபடிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்றும், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைதேடியவர்கள் என்றும் தெரியவந்து உள்ளது.
கொலையில் முக்கிய குற்றவாளியான விஷால் ரானா (வயது 20) அப்பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவர் சஞ்சய் ரானாவின் மகன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது அக்லாக் குடும்பத்தினரை தாக்குவதற்கு முன்னதாக, கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்றும் கூறப்படுகிறது. விஷால் ரானா படிப்பை 12-ம் வகுப்புடன் நிறுத்திவிட்டு, தெற்கு டெல்லியில் உள்ள அவரது உறவினரின் விளம்பர ஏஜென்ஸியில் வேலை பார்த்துவந்து உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய சகோதரர்கள் விவேக் (வயது 22), சச்சின் (வயது 20) ஆகியோரும் ரானாவின் உறவினர்கள். மெடிக்கல் லேப் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படிக்கும் சிவமும் (வயது 19), பள்ளி படிப்பை முடித்துவிட்டு இருக்கும் சந்தீப்பும் (வயது 18) கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பிசாரா கிராமத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு -147 (கலகம் விளைவித்த குற்றம்), 148 (அபாயகரமான ஆயுதம் தாங்கி கலகம் விளைவித்தல்), 149 (சட்ட விரோதமான கும்பல்), 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 458 (வீட்டில்அத்துமீறி நுளைந்து தாக்குதல்), 504 (அமைதிக் குலைவு) ஆகிய பிரிவுகளில் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்ற உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். உத்தரபிரதேச மாநில அரசின் சார்பில் நிதியுதவியும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோர் மீதும், ஆதாரம் இல்லாமல் வதந்திகளை செய்திகளாக வெளியிடும் சமூக வலைதளங்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க, உத்தரபிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com