குண்டும் குழியுமாக மாறிய சாலை! குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!- பள்ளி சிறுவர்கள் அவதி!

ye1210P1 (1)

ஏற்காட்டில் நர்சரி பள்ளி உள்ள இடத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் ரூ.1,97,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட காண்கிரீட் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் சாலையை கடக்க பள்ளி சிறுவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

ஏற்காடு லேடீஸ் சீட் வியு பாயிண்ட் செல்லும் சாலையில் தனியார் நர்சரி மற்றும் துவக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஒட்டி நுழைவு வாயில் உள்ள பகுதியில் இருந்து பொது சாலையானது மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காண்கிரீட் சாலை, ஏற்காடு பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பில் ரூ.1,97,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.

இந்த காண்கிரீட் சாலையானது தரமற்ற நிலையில் அமைத்ததால், அமைத்த சில மாதங்களிலேயே குண்டும், குழியுமாக மாறியது. அங்கு மழை பெய்யும் போதெல்லாம் மழைநீர் பெருமளவு குட்டை போல தேங்கி நிற்கின்றது.

நேற்று ஏற்காட்டில் 10 சென்டி மீட்டர் அளவிற்கு கன மழை பெய்ததால் இங்கு அதிகளவிலான மழை நீர் தேங்கி நிற்கின்றது. இதனால் இந்த பள்ளியில் இருந்து வெளியேறும் பள்ளி சிறுவர்கள் சாலையை கடக்க பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பள்ளி சிறுவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-நவீன் குமார்.