சேலம் மாவட்டம், ஏற்காடு, மோட்டூர் கிராமத்தில் நடைப்பெற்ற மனு நீதி நாள் முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் 2 மணி நேரம் கால தாமதமாக வந்ததால், பொது மக்கள் கலைந்து சென்றனர். சான்றிதழ்களை பெற வந்த பயனாளிகளை மட்டுமே வைத்து முகாம் நடைப்பெற்றது.
ஏற்காடு தாலுக்கா வெள்ளக்கடை பஞ்சாயத்திற்குட்பட்ட மோட்டூர் கிராமத்தில், காலை 11 மணிக்கு, சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தலைமையில், மனு நீதி நாள் முகாம் நடைபெறுவதாககூறி, அங்கு முகாமிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை 10.30 மணி முதலே பொது மக்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.
ஆனால், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1 மணிக்கு மோட்டூர் கிராமத்திற்கு வந்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தாமதமாக வந்து காரில் இருந்து இறங்கும்போதே, அங்கிருந்த சவுண்ட் சிஸ்டம் மூலம் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பபட்டது. அவர் மேடைக்கு வர வர பாடல் பாடிகொண்டிருந்தது. எனவே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் தமிழ்தாய் வாழ்த்தை உடனடியாக நிறுத்த கூறினார். பின்னர் அவர் மேடைக்கு வந்த பின் மீண்டும் ஒரு முறை தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பபட்டது. இவ்வாறு தமிழ்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியதும், இரு முறை ஒலிபரப்பியதும் அங்கிருந்த அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் முகாம் துவங்கியது.
முகாமில் அரசு துறை அதிகாரிகள் தங்கள் துறை பற்றியும், துறைகளில் இருந்து மக்களுக்கு கிடைக்கும் நலத்திட்ட உதவிகளை பற்றி விளக்கினர்.
மேலும், முகாமில் குடும்ப அட்டைகள் 21, ஜாதி சான்றிதழ்கள் 19, பட்டா மாறுதல் சான்றிதழ்கள் 10, மாற்றுதிறனாளி சான்றிதழ்கள் 3, விதவை சான்றிதழ்கள் 3 மற்றும் 4 நபர்களுக்கு சாமை விதைகள் வழங்கப்பட்டது.
முகாமில் ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணன், சமூக பாதுகாப்பு தாசில்தார் பாலாஜி, பி.டி.ஓ. ஜெயராமன் உள்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-நவீன் குமார்.