இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச வழமையான விதிமுறைகளை மீறி இலங்கை கடற்படையில் இணைத்து கொள்ளப்பட்டார் என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணமாகியுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவின் 13 மாத பாடநெறி ஒன்றுக்கு உக்ரைன் அரசாங்கம் சலுகை வழங்கியதாகவும், உக்ரைன் அரசாங்கத்தின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனம் அதற்கான கட்டணத்தை செலுத்தியதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
தத்துவத்துறையில் கலாநிதி பட்டம் உட்பட ஏனைய பாடநெறிகளுக்கும் இவ்வாறு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, யோஷித்த ராஜபக்ச பாடநெறிகளை கற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
உக்ரைனில் செயற்படும் ரஷ்யா ஆதரவு போரளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததாக உதயங்க வீரதுங்க மீது உக்ரைன் அரசாங்கம் ஏற்கனவே குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் ஆதரவுடன் உதயங்க, உக்ரைன் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் யோஷித்த ராஜபக்ச நடைமுறைகளை மீறி கடற்படையில் இணைத்து கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை நடத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா, மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தார்.
ரியர் அட்மிரல் டி.டப்ளியூ.பீ. வெத்தவ, கொமடோர்களான யு.எஸ்.ஆர்.பெரேரா, எம்.எம்.வீ.பீ. மெதகொட ஆகியோர் இந்த விசாரணை குழுவில் அங்கம் வகித்து வருகின்றனர். இவர்களது விசாரணை அறிக்கையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
யோஷித்த ராஜபக்ச, கடற்படையில் இணைய பாடசாலை மாணவர் படையணியின் (NRX 2431) சான்றிதழ் முன்வைத்திருந்ததுடன் உயர் தரத்தில் இரண்டு தேர்ச்சிகளுடன், சாதாரண தரத்தில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சிங்களம் ஆகியவற்றில் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்ற கல்விச் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இவற்றுக்காக தனிப்பட்ட கோப்பு ஒன்றை பாரமரிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அவர் சாதாரண தரத்தில் ஒரே தடவையில் சிங்களத்தில் தேர்ச்சிப்பெறவில்லை என தெரியவந்ததுள்ளது. அத்துடன் அவரது கோப்பில் உயர்தரம் மற்றும் சாதாரண தர கல்விச் சான்றிதழ்கள் இல்லை.
ஆட்சேர்ப்பு சபையின் ஊடாக எந்த பரிந்துரைகளும் கிடைக்காத நிலையில், யோஷித்த ராஜபக்சவின் சாதாரண தர கல்விச் சான்றிதழை ஏற்றுக்கொள்வது என கடற்படை தீர்மானித்ததுடன், அவரை கடற்படையில் இணைத்து கொண்டுள்ளது. இதனால், யோஷித்த ராஜபக்ச கடற்படையில் இணைத்து கொள்ளப்பட்டமை தொடர்பில் சபையினால், தீர்க்கமான அறிவிப்பை வெளியிட முடியாது.
இதன் காரணமாக இதனை ஒரு சிறப்பு விசாரணையாக கருத முடியும். யோஷித்த ராஜபக்ச கடற்படை அகடமியில் பயிற்சி பெற்று வந்த போது அவருக்கு கடற்படையை சேர்ந்த மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர்.
இதனை தவிர பயிற்சி பெறும் பிரதேசத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மேலதிக பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே லெப்டினட் யோஷித்த ராஜபக்சவுக்கு, முன்னாள் கடற்படை தளபதி விசேட பரிசுகளையும் வழங்கியுள்ளதாக தற்போது நிரூபணமாகியுள்ளது.
அத்துடன் யோஷித்த ராஜபக்ச பிரித்தானிய றோயல் கடற்படை அகடமிக்கு அவர் திறமையின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்படவில்லை. அவருக்காக மட்டுமே தனியாக கட்டணம் செலுத்தப்பட்டு அதனை பெற்றுள்ளனர்.
இதன் பின்னர், அவர் பிரித்தானிய றோயல் கடற்படையில் இரண்டு பாடநெறிகளுக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
இதன் பின்னர் யோஷித்த ராஜபக்ச, கடற்படையின் துணை லெப்டினன் ஆக இணைத்து கொள்ளப்பட்டதுடன், மீண்டும் ஹெம்ப்ஷயர் கொலிங்ஹூட்டில் உள்ள சர்வதேச துணை பாடநெறிக்காக கடற்படை போரியல் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர், யோஷித்த ராஜபக்ச தனது மாமானரான உதயங்க வீரதுங்கவின் ஏற்பாட்டில், உக்ரைனில் உள்ள பாதுகாப்பு தொடர்பான தேசிய பல்கலைக்கழகத்தில் 2009 அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையான முதுகலை டிப்ளோமா பாடநெறிக்காக சேர்ந்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, யோஷித்த ராஜபக்சவிற்கு தினமும் வெளிநாட்டு சலுகையும், பயணம் மற்றும் தொலைபேசி கட்டணங்களுக்கான செலவுகளை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனடிப்படையில், உதயங்க வீரதுங்கவுக்கு மிக நெருக்கமான உக்ரைன் நிறுவனம் இதற்கான பணத்தை செலுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தின் நேரடியான அழைப்பு யோஷித்த ராஜபக்சவுக்கு கிடைத்துள்ளது. தேர்வு நடைமுறைகள் எதனையும் அந்த நிறுவனம் பின்பற்றவில்லை.
இந்த பாடநெறியை பூர்த்தி செய்த பின்னர், யோஷித்த தத்துவம் தொடர்பான கலாநிதி பாடநெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மூவரடங்கிய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலை கடற்படை முகாமில் நடைபெற்ற பயிற்சிகளை முடித்து வெளியேறும் அணி வகுப்பு மரியாதை நிகழ்வில், யோஷித்த ராஜபக்சவுக்கு ஆண்டின் சிறந்த கடற்படை பயிற்சியாளருக்கான விருதும் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ஏற்பாடு செய்திருந்தார்.
யோஷித்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டார்.
இதன் பின்னர் கடற்படை தலைமையகத்தில் பணியாற்றினார். அலரி மாளிகையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்சவுக்கு விசேட அடையாள அட்டை வழங்கப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது.
யோஷித்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டதுடன் அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்த நேரத்திலும் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது. இதை விட வெட்ககேடு வேறு என்ன இருக்க முடியும்?
-வினித்.