தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்க வகை செய்யும் அரசியல் சட்டதிருத்த மசோதா கடந்த 2014–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.
உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் ‘கொலிஜியம்’ முறையை ஒழித்துவிட்டு நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் நீதிபதிகளை நியமிக்க அரசியல் சாசன அந்தஸ்து அளிக்கும் வகையில் இந்த அரசியல் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த அரசியல் சட்டத்திருத்த மசோதாவுக்கு, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதியளவு மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும்.
இந்த மசோதாவுக்கு நாட்டின் 29 மாநிலங்களில் 20 மாநிலங்கள் ஒப்புதல் அளித்தன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலும் இந்த சட்டத்துக்கு வழங்கப்பட்டது.
இது அரசியல் அமைப்பு (99–வது திருத்தம்) சட்டம் 2014 என்று அழைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் மற்றும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்ற பதிவு பெற்ற வக்கீல்கள் சங்கம் சார்பாக மூத்த வக்கீல் பாலி நாரிமன் மற்றும் இந்திய வக்கீல்கள் சங்கம் சார்பாக அனில் திவான் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இவை தவிர தனியாக சில வக்கீல்களும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் தொடர்பான அரசியல் சாசன சட்டத் திருத்தங்களின் ஏற்புத்தன்மை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும் நீதிபதிகள் நியமன விவகாரத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கொலிஜியம் முறையே தொடரவேண்டும் என்றும் இல்லையென்றால் நீதித்துறையின் சுதந்திரத் தன்மைக்கு இந்தப்புதிய முறை பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர் தலைமையில் ஜே.செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப், ஆதர்ஷ்குமார் கோயல் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வு அமைக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் அனைத்து மாநில அரசுகளும் அந்தந்த அரசுகளின் வக்கீல்கள் பதிவிறக்கம் செய்து பதிலை தயாரிக்க வசதியாக உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக பிரதான மனுவை உச்ச நீதிமன்ற இணையத்தில் பதிவேற்றவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முதல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
மத்திய அரசு சார்பில் நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்துக்கு ஆதரவாக அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆஜராகி வாதாடினார். மூத்த வக்கீல்கள் அந்தியார்ஜூனா மற்றும் துஷ்யந்த் தவே, கே.கே.வேணுகோபால் ஆகியோர் கொலிஜியம் முறைக்கு எதிராக வாதாடினர்.
நீதிபதிகள் நியமன சட்டத்துக்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் பாலி நாரிமன், ராம்ஜெத்மலானி, அனில் திவான், ஹரிஷ் சால்வே போன்ற மூத்த வக்கீல்கள் வாதாடினர்.
இந்த வழக்கின் மீதான இறுதி வாதங்கள் இரு தரப்பிலும் கடந்த ஜூலை 15–ந் தேதி முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், ஜே.செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, ‘நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத் திருத்த மசோதா அரசியல் சாசன அமைப்பு முறை மற்றும் கொள்கைகளை மீறுவதாக அமைந்து உள்ளது. இதில் காணப்படும் பல்வேறு விதிமுறைகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக இருக்கின்றன. எனவே, நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் செல்லாது. மேலும், கொலிஜியம் முறையால் நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இயலும் என்று அதிரடியாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்ட முக்கிய ஆணைகள் பற்றிய விவரம் வருமாறு:–
(1) இந்த வழக்கின் விசாரணையை 9 நீதிபதிகள் அடங்கிய பேரமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.
(2) நீதிபதிகள் நியமனத்தில் கொலிஜியம் முறையை மாற்றி நீதிபதிகள் நியமன ஆணையத்தை அமைக்கும் வகையில் செய்யப்படும் 99–வது அரசியல் ஆணைய சட்டத்திருத்த சட்டம், 2014 அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் செல்லாதது என்றும் அறிவிக்கப்படுகிறது.
(3) தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டம் 2014 அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் செல்லாதது எனவும் அறிவிக்கப்படுகிறது.
(4) உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் மாற்றம் தொடர்பான செயல்பாடுகளுக்கு முந்தைய ‘கொலிஜியம்’ முறையையே தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும்.
(5) மேலும் தற்போது நீதிமன்றம் அனுமதிக்கும் கொலிஜியம் நடைமுறையில் மாற்றங்கள் அல்லது மேம்படுத்தும் நடைமுறை தொடர்பாக வருகிற 3–ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் குமார் கோயல் ஆகிய 4 நீதிபதிகள் கொலிஜியம் முறைக்கு ஆதரவாகவும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்துக்கு எதிராகவும், இத்தீர்ப்பில் தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
அதே நேரத்தில் இரண்டாவது நீதிபதியான ஜே.எஸ்.செல்லமேஸ்வர் தேசிய நீதிபதிகள் நியமன சட்டத்துக்கு ஆதரவாக தன்னுடைய மாறுபட்ட கருத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நீதிதுறைக்கு மகிழ்ச்சியையும், நரேந்திரமோதி தலைமையிலான மத்திய அரசுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com