ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனங்களை செய்வற்காக ‘தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்’ அமைத்து மத்திய அரசு இயற்றிய சட்டம் செல்லாது என 16.10.2015 அன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அது குறித்த தனது தனிப்பட்ட கருத்தினை ‘பேஸ் புக்’ பக்கத்தில் 18.10.2015 அன்று பதிவு செய்துள்ளார்.
அதில் அவர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, தவறான தர்க்கத்தின் அடிப்படையிலானது என விமர்சித்து உள்ளார்.
மேலும் அவர், ‘‘நீதித்துறை சுதந்திரம் என்ற ஒரே ஒரு கட்டமைப்பை அந்த தீர்ப்பு நிலை நிறுத்தி உள்ளது.
ஆனால், அரசியல் சாசனத்தின் பிற 5 கட்டமைப்புகளான பாராளுமன்ற ஜனநாயகம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மந்திரிசபை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியவற்றை குறைபடுத்தி விட்டது’’ என கூறி உள்ளார்.
அத்துடன், இந்திய ஜனநாயகம் தேர்ந்தெடுக்கப் படாதவர்களின் கொடுங்கோன்மையாகி விட முடியாது. தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பலவீனப்படுத்தப்படுகிறபோது, ஜனநாயகத்துக்கு அது ஆபத்தாக முடியும் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இது நீதித்துறையில் பணியாற்றும் நீதிபதிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ‘பேஸ் புக்’ மற்றும் நாளிதழ்களில் வெளியான செய்திகளை ஆதாரமாக கொண்டு, தானாக முன்வந்து உத்தரபிரதேச மாநிலம் மஹோபா (Mahoba) மாவட்டம், குல்பகார் சிவில் நீதிபதி அங்கிட் கோயல், அருண் ஜெட்லி மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டார். மேலும், நவம்பர் 19-ம் தேதி நேரில் ஆஜராகவும் அருண் ஜெட்லிக்கு போலீஸ் எஸ்.பி. மூலமாக நீதிபதி சம்மன் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மீது முதல் தகவல் அறிக்கை எண்:(FIR No. 328/15) இந்திய தண்டனைச் சட்டம்(IPC) 124(A) (அரசுக்கு எதிராக பகை மூட்டுதல்) மற்றும் 505 (பொது அழிம்பை உண்டாக்கும் கருத்துக்கள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே “ஆதார் அடையாள அட்டை” வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு அவமானப்பட்டு வரும் நிலையில், தற்போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டது, மத்திய ஆட்சியாளர்களுக்கு பெரும் களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com