இயற்கை ஆதாரங்களுள் முதன்மையானதாக விளங்கும் நீரினை முறையாகப் பயன்படுத்தும் வகையில், பாசனக் கட்டமைப்புகளை பராமரித்து, புதிய பாசனத் திட்டங்களை உருவாக்கி, அதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார்.
அதற்காக தமிழகத்தின் ஆறு, ஏரி, குளம், கால்வாய், அணைகள் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளைப் புனரமைக்கவும், நவீனப்படுத்தவும் ரூ.670 கோடி செலவில் தமிழக அரசு திட்டம் வகுத்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 2014 ஆண்டு, ஆகஸ்டு 4 ஆம் நாள், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை கிராமத்தில் உய்யகொண்டான் வாய்க்காலின், தலை மதகில் உள்ள மண் போக்கி, அதாவது Sand Vent மற்றும் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்கால் ஆகியவை 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், அதிகாரிகளின் தனிப்பட்ட ஆதாயமும், அலட்சிய போக்கும், பொதுமக்களின் பொறுப்பற்ற தன்மையும், இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு இன்று வரை தடையாக இருக்கிறது. அரசு பணம்தான் விரையமானதே தவிர, உய்யகொண்டான் வாய்க்காலின் அவலநிலை கொஞ்சம் கூட மாறவில்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் வெட்டப்பட்ட திருச்சி உய்யகொண்டான் கால்வாய், பெட்டவாய்தலையில் இருந்து பிரிந்து, திருச்சி வழியாக சென்று, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே சேராண்டி ஏரியில் முடிகிறது. 71கி.மீ தூரம் பயணம் செய்யும் இந்த கால்வாய் 32,742 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது.
திருச்சி மாநகரின் குப்பைத் தொட்டியாகவே உய்யகொண்டான் கால்வாய் மாறிபோய் உள்ளது. திருச்சி மாநகரில் சுமார் 10 கி.மீ தூரத்திற்கு வீடுகள், வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மற்றும் மருத்துவ மனைகள் ஆகியவற்றில் இருந்து வெளிவரும் கழிவுகள் அனைத்தும், நேரடியாகவே உய்யகொண்டான் கால்வாயில் கலக்கிறது. இதனால் இந்த கால்வாய் நீர் விவசாயத்திற்கு கூட பயன்படாத அளவிற்கு பெருமளவு மாசடைந்து உள்ளது.
மேலும், உய்யகொண்டான் கால்வாயை ஆக்ரமித்து ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் நீர்வரத்தில் தடை ஏற்பட்டு, விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இவற்றையெல்லாம் சம்மந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மற்றும் திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் வேடிக்கைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்களே தவிர, இதை தடுப்பதற்கும், உய்யகொண்டான் கால்வாயை தூய்மைப்படுத்துவதற்கும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தினால் மட்டும்தான், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
படங்கள்: ராயன்ஜோசப், சென்ராய், மெர்வின்ஜோன், அருள் மைக்கேல் ஆன்டனி, சபரிராஜா.