சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரி, விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

JAYALALITHAA

pr241015_534

சவுதி அரேபியாவில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரி.

சவுதி அரேபியாவில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரி.

சவுதி அரேபியாவில் வீட்டு உரிமையாளரால் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் கஸ்தூரி, விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழைப்பெண் கஸ்தூரி முனிரத்னம், சவுதி அரேபியாவில் வீட்டுப்பணியாளராக இருந்த நிலையில் அவர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவத்தில் உங்கள் தனிப்பட்ட தலையீட்டை கேட்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன். கஸ்தூரியின் கை வெட்டப்பட்டதோடு படுகாயம் அடைந்துள்ள சம்பவம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த கோரமான சம்பவம் குறித்த தகவல் பெறப்பட்டதும் எனது அறிவுரையின் பேரில், மத்திய வெளியுறவுத் துறை மற்றும் அயல்நாட்டு இந்திய விவகாரத் துறையிடம் இந்த விஷயத்தை தமிழக அரசு எடுத்துச்சென்றுள்ளது. தன் உடலில் ஏற்பட்டுள்ள கொடுங்காயங்கள் அனைத்தும் கஸ்தூரி பணியாற்றிய வீட்டின் உரிமையாளரால் ஏற்படுத்தப்பட்டது என்று அவரே தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்தத் தகவல் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் கிடைக்கப்பெற்றது.

கஸ்தூரியின் நிலை பற்றி அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டனர். அதற்கு டாக்டர்கள், கஸ்தூரியின் மனநிலை மிகவும் ஸ்திரமானதாக இருப்பதாக கூறியுள்ளனர்.

ஆனால், கஸ்தூரிக்கு மனநிலை சரியில்லை என்றும், பணியாற்றிய வீட்டில் இருந்து தப்பிச் செல்லும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது என்றும், வீட்டு உரிமையாளரால் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றும் ஒரு மாயத்தோற்றத்தை சவுதி போலீசார் உருவாக்க முயலுகின்றனர் என்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

எனது மற்றும் தமிழக மக்களின் கவலை என்னவென்றால், உள்ளூர்க்காரரான அந்த வீட்டு உரிமையாளரை காப்பாற்றுவதற்கும், இந்த ஏழை பெண் கஸ்தூரி விவகாரத்தில் மனித உரிமைகளை புறந்தள்ளுவதற்கும் முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சவுதி அரேபியாவுக்கு கஸ்தூரி சென்றார். இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அவருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு சீக்கிரமாக அவர் தாயகம் திரும்புவதற்கான உறுதியை அளிக்க வேண்டும். மேலும், சவுதி அரேபியாவில் கஸ்தூரி இருக்கும் நாள் வரைக்கும் அவருக்கு போதிய பாதுகாப்பு தேவைப்படுகிறது.

கஸ்தூரிக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த விவகாரத்தை உயர்மட்ட நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அவருக்கு சிறந்த சிகிச்சை கிடைப்பதோடு, காயங்கள் மற்றும் கடுமையான கஷ்டங்களுக்கான தகுந்த இழப்பீடு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மிக விரைவில் அவர் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் விரைவாக நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com