ஏற்காடு யூனியனுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு! -அதிகாரிகள் அலட்சியம்!

ye2710P1

ஏற்காடு யூனியனுக்கு சொந்தமான ரூ.30 இலட்சம் மதிப்பிலான நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பை அகற்ற யூனியன் நிர்வாகத்தினர் தயங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஏற்காடு மாண்ட்போர்ட் பள்ளி எதிரே, ஏற்காடு யூனியனுக்கு சொந்தமான 1,669 சதுர அடி நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வேலி அமைத்து வைத்துள்ளதாக, ஏற்காடு பகுதியை சேர்ந்த பஞ்சநாதன் என்பவர், ஏற்காடு வட்டாட்சியரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்துள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணன், அந்த நிலம் குறித்து ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த நிலம் ஏற்காடு யூனியனுக்கு சொந்தமானதுதான் என்றும், அதை அருகில் உள்ள விக்டோரியா அசம்பளி டிரஸ்டை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், மேலும், அந்த நிலத்தில் ஏற்காடு பஞ்சாயத்திற்கு சொந்தமான தண்ணீர் பைப்கள் செல்வதாகவும் உறுதிப்படுத்தி விட்டு, அந்த நிலத்தின் மீதான ஆக்கிரமிப்பை அகற்ற ஏற்காடு பி.டி.ஓ.விற்கு பரிந்துரையும், ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பும் அளிப்பதாக, ஏற்காடு பி.டி.ஓ.விற்கு கடந்த ஏப்ரல் மாதமே கடிதம் அனுப்பியுள்ளார்.

ஏற்காடு டவுன் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு சதுர அடி   ரூ.2,500 என்ற நிலையில் இருக்க, வட்டாட்சியர் கடிதம் அனுப்பி 6 மாதங்களுக்கு மேலாகியும், குறிப்பிட்ட ரூ.30 இலட்சம் மதிப்பிலான நிலத்தை ஏற்காடு யூனியன் நிர்வாகத்தினர் மீட்க தயங்கி வருவதாக புகார்தாரர் பஞ்சநாதன் குற்றச்சாட்டியுள்ளார்.

 -நவீன் குமார்.