மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 09.05.2007 அன்று மு.க. அழகிரி ஆதரவாளர்களால், தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் கோபி, வினோத், முத்துராமலிங்கம் ஆகிய 3 பேர் இறந்தனர்.
தீ வைத்து எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து, சி.பி.ஐ தாக்கல் செய்த அப்பீல் மனுவை, மதுரை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி, மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக்குழு முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான வி.பி.பாண்டி என்கிற அட்டாக்பாண்டி, திருச்செல்வம், ஆரோக்கியபிரபு, சரவணமுத்து உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தீ வைப்பு சம்பவத்தை தடுக்க தவறியதாக, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆலடியார் நடந்த சம்பவங்களை விளக்கமாக கூறி உள்ளார். யாரெல்லாம் வாகனங்களுக்கு தீ வைத்தது, யாரெல்லாம் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசினர் என்று குற்றவாளிகளை அடையாளம் காட்டி உள்ளார். அவரது சாட்சியத்தை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் முற்றிலுமாக நிராகரித்து இருக்கக்கூடாது.
சப்-இன்ஸ்பெக்டர் ஆலடியார் அடையாள அணிவகுப்பின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டவில்லை என்று கூறுவது தவறானது.
இந்த வழக்கில் சாட்சிகளில் பெரும்பாலானவர்கள் பிறழ்சாட்சியாக மாறிய போதிலும் கூட, வீடியோ ஆதாரம், பத்திரிகை புகைப்பட ஆதாரம் போன்ற தொழில்நுட்ப சாட்சியங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
குற்றம் நடந்ததற்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. எனவே, குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்த கீழ்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த அப்பீல் மனு நீதிபதிகள் ஜனார்த்தனராஜா, அருணாஜெகதீசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த அப்பீல் மனு சம்பந்தமாக அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேரும் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இந்த வழக்கில் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பளித்த மதுரை சி.பி.ஐ நீதி மன்றம், குற்றம் சாட்டப்பட்ட அட்டாக்பாண்டி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்தது.
இந்நிலையில், இறந்து போன வினோத்தின் தாயார் பூங்கொடி, மறு விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு போட்டார். அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று (27.10.2015) நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com