தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் “நமக்கு நாமே” என்ற பெயரில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வருகின்ற நவம்பர் 21-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் “நமக்கு நாமே” நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்காக, செங்கல்பட்டு தாலுக்கா, ஆப்பூரில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில், தனியாருக்கு சொந்தமான நிலங்களை இயந்திரங்கள் கொண்டு சமன் செய்யும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆப்பூர் வருவாய் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண்.103-ல், ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தையும், சர்வே எண்.92-ல், ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தையும், தி.மு.க.வினர் மண்ணைக் கொட்டி குளத்தை மூடி விட்டனர்.
குளத்தைத் தி.மு.க.வினர் மண்ணைக் கொட்டி நிரப்புவதாக கடந்த 25-ம் தேதி அப்பகுதியினர் வருவாய்த் துறையினருக்குப் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம், உடனே, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அந்தப் பணிக்குத் தடை விதித்தார்.
மேலும், வருவாய் துறையினர், பாலூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதனால், காட்டாங்கொளத்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர் தண்டபாணி, ஆப்பூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சந்துரு (எ) ரவிச்சந்திரன், ஆப்பூரை சேர்ந்த சந்தானம் ஆகியோர் மீது குற்ற எண்: 287 / 2015, இந்திய தண்டனைச் சட்டம்(IPC) 430 -(நீர்பாசன கேடு செய்து அழிம்பு) 431 -(பொது சாலை, ஆறு, பாலம் கேடு அழிம்பு) 447- (குற்றமுறு அத்துமீறல்) 427-(ரூ.50-க்கும் மேற்பட்ட சேதம் அழிம்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றம் (1)-ல் ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் மூவரையும் வருகின்ற நவம்பர் 6-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சிட்டிபாபு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com