தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால், டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆகிய 3 சிறுவர்கள் இந்த வழக்கை தொடர்ந்தனர். 3 பேரின் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு கோரி மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் நோட்டீசு அனுப்ப கடந்த 8-ந் தேதி உத்தரவிட்டது.
இது குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பிலும், சிவகாசியில் உள்ள ஸ்ரீ அய்யப்ப சங்கம் உள்ளிட்ட இந்து அமைப்புக்கள் சார்பிலும் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அருண் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் நேற்று (28.10.2015) நடைபெற்றது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தின் போது கூறியதாவது:-
தீபாவளியின் போது அதிக சத்தம் மற்றும் அதிக புகையை வெளியிடும் பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான முறையில் பாதிப்பு அடைகிறது. இது பலவகையான சுகாதாரக் கேடுகளை உண்டாக்குகிறது. எனவே மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.
அப்படி தடை விதிக்க ஏதேனும் தயக்கங்கள் இருக்கும் பட்சத்தில், பட்டாசு வெடிக்க குறைந்த நேரம் ஒதுக்கி அனுமதி வழங்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து ஏற்கனவே உள்ள உத்தரவில் மேலும் கடுமையான நிபந்தனைகளை சேர்க்க வேண்டும். மேலும், ஊர் முழுவதும் பட்டாசு வெடிப்பதற்கு பதிலாக, பொதுவான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கு அனைவரும் பட்டாசு வெடிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதாடுகையில் கூறியதாவது:-
தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பது குறித்து ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 2005-ம் ஆண்டு நிறைய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. அந்த கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி இருக்கிறது. அந்த உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
தற்போது, பட்டாசு வெடிப்பது பற்றிய பாதுகாப்பு நிபந்தனைகள் குறித்து வருகிற 31-ந் தேதியில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்படும். மேலும் வருகிற நவம்பர் 4-ந் தேதியில் இருந்து அனைத்து ஊடகங்களிலும், பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்தும், சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் விளம்பரங்கள் வெளியிடப்படும். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவில் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க தேவை இல்லை. இவ்வாறு ரஞ்சித் குமார் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை எதுவும் தேவை இல்லை. அதே நேரத்தில், அரசாங்கம் விழிப்புணர்வு குறித்த விளம்பரங்களை வருகிற 31-ந் தேதி முதல் நவம்பர் 12-ந் தேதி வரை அனைத்து ஊடகங்களிலும் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் பெருமளவில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும். கடந்த 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் விதிக்கப்பட்ட நிபந்தனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
மனுதாரர்கள் கோரியுள்ளபடி, பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.
–டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com