ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளை!- முகமூடி அணிந்த நபர்கள் அட்டகாசம்!  

???????????????????????????????

ஏற்காட்டில் எஸ்டேட் அதிபர் வீட்டில் 01.11.2015 ஞாயிறு அன்று முகமூடி அணிந்த நபர்கள் ரூ.1 இலட்சம் பணம் மற்றும் 8 பவுண் நகையையும் கொள்ளையடித்து சென்றனர்.

ஏற்காட்டில் பகோடா பாயிண்ட் செல்லும் சாலையில் உள்ள கிரேஞ்ச் டி எஸ்டேட்டின் உள்பகுதியில் உள்ள தனி வீட்டில் அதன் உரிமையாளர் அப்துல் சத்தார்(வயது70)  மற்றும் அவரது மனைவி நூர்ஜகான் (வயது55) ஆகியோர் மட்டும் தனியாக வசித்து வருகின்றனர்.

இவர் தனது எஸ்டேட்டிற்கு காவலர்கள் யாரையும் நியமிக்கவில்லை. 15-க்கும் மேற்பட்ட நாய்கள் மட்டும் காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளார்.

01.11.2015 ஞாயிறு இரவு வீட்டிற்கு வெளியே நாய்கள் குரைத்துள்ளது. அப்துல் சத்தார் காட்டெருமைகளை கண்டுதான் நாய்கள் குரைக்கின்றது என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.  

அப்போது அங்கு மறைந்திருந்த முகமூடி அணிந்த நபர்கள் நால்வர் கத்தி மற்றும் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து அதில் இருவர் அப்துல் சத்தாரை பிடித்துக்கொண்டனர். அவர் செய்வதறியாது சிக்கி கொண்டார்.

அப்போது மற்ற இருவர் வீட்டிற்குள் சென்று அப்துல் சத்தார் மனைவி நூர்ஜகானை கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த ஒரு இலட்ச ரூபாய் பணம் மற்றும் 8 பவுண் நகையை எடுத்து கொண்டு வெளியே வந்தனர். உடனடியாக நால்வரும் வீட்டின் பின்புறமாக தப்பி சென்று விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான காவல் துறையினர் மோப்ப நாய் சீதாவை பயன்படுத்தி தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர். மோப்ப பணியில் ஈடுப்பட்ட சீதா வீட்டில் சென்று விட்டு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள மூடப்பட்ட பனியன் கம்பெனி அருகில் சென்று நின்று விட்டது. 

வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் சின்னப்பன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

எஸ்டேட் அதிபர் கூறியதாவது:

நான் எப்போதும் பணத்தை வீட்டில் வைப்பது கிடையாது. எனது எஸ்டேட்டில் மரங்கள் வெட்ட ஒருவர் முன்பணம் இருதினங்களுக்கு முன்னர்தான் கட்டிவிட்டு சென்றார். வங்கி விடுமுறை என்பதால் அந்த தொகையை வீட்டில் வைத்திருந்தேன். இந்த விஷயத்தை அறிந்த யரோதான் இந்த திருட்டில் ஈடுப்பட்டிருக்கலாம்  என்றார்.                                        

 -நவீன் குமார்.