திருச்சி நெ.1 டோல்கேட்டில் பஞ்சர் கடை நடத்திவரும் கே.அக்தர் அலி (54), தான் தயாரித்த பவுடரைப்பயன்படுத்தி டிராக்டர், ஜே.சி.பி, கார், லாரி, டூ வீலர் உட்பட 1500-க்கும் மேற்பட்ட வாகனங்களை பஞ்சர் ஏற்பட்டாலும் வேலை பாதிக்காத வகையில் ஓட விட்டிருக்கிறார்.
இவரது பவுடர் பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வைத்திருக்கும் விவசாயி கூறுகையில், உழவுக்குச் செல்லும் இடத்தில் பஞ்சர் ஆனாலும் கவலையில்லை என்கிறார்.
இது குறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்திற்கு கே.அக்தர் அலி தெரிவித்தது, இதோ உங்களுக்காக…
4-ம் வகுப்பு வரை படித்த நான், என் அப்பாவிற்கு துணையாக அவர் பார்த்து வந்த பஞ்சர் ஒட்டும் தொழிலுக்கு 10 வயதிலேயே வந்துவிட்டேன்.
கடந்த 46 வருடமாக சமயபுரம் நம்பர்.1 டோல்கேட்டில் லால்குடி செல்லும் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள புளியமரம் அருகே கடை நடத்தி வருகிறேன்.
விவசாயம் பிரதானமாக இருக்கும் இப்பகுதியில் உழவுக்கு வரும் டிராக்டர்கள் இதர பணிக்கு வரும் ஜே.சி.பி இயந்திரங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி வயல்வெளி, வாய்க்கால் மேடுகளில் நிற்கும் இவற்றின் டயரைக் கழற்றிப் பார்த்தால் முள், இரும்புக் கம்பி ஏதாவது குத்தி டியூபை காலி செய்திருக்கும். குறைந்தது 8 பஞ்சர் ஆகியிருக்கும். நகருக்குள் வந்து புதிய டியூப் வாங்கிச் சென்று சரிசெய்வதற்குள் அரை நாள் கடந்துவிடும்.
இதனால் விவசாயிக்கும், டிராக்டர் முதலாளிக்கும் நஷ்டம் ஏற்படும். இது தவிர பஞ்சர் மட்டும் பார்க்கலாம் என்றாலும் தோராயமாக குறைந்தது ரூ.40 வீதம் 8 பஞ்சருக்கு ரூ.320 செலவாகும்.
இதுபோன்று ஜே.சி.பி. இயந்திரம், நெல்அறுவடை இயந்திரம், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்போர் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் பொதுவான பிரச்சனை பஞ்சர் ஏற்படுவது. இதற்கு தீர்வு காணும் வகையில் நான் ஒரு பவுடரைத் தயார் செய்துள்ளேன். இதைப் பயன்படுத்துவது எளிது. டயரில் இருக்கும் டியூபை கழற்றி எடுத்து விட்டு பவுடரை சாதாரண தண்ணீருடன் கலந்து டயரின் உட்புறம் செலுத்தினால் போதும். டிஸ்குடன் டயர் சேர்ந்து கொள்ளும். அப்புறம் வழக்கம் போல் காற்று நிரப்பி ஓட்ட வேண்டியதுதான். இதனை பயன்படுத்துவதால் மைலேஜ் குறையாது.
காற்றின் அளவு சரியாக இருந்தால் போதும். மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னிடம் இந்த பவுடரை பயன்படுத்திய டிராக்டர்களின் டயர்கள் தேய்ந்துள்ளதே தவிர பஞ்சருக்கு வரவில்லை என்கிறார் அக்தர் அலி.
இது குறித்து பிச்சாண்டார்கோயிலை சேர்ந்த விவசாயி ரெங்கநாதன் கூறும்போது சொந்தமாக டிராக்டர் வைத்துள்ளேன்.
மற்ற வாகனங்களுக்கு எல்லாம் டியூப்லெஸ் டயர் வந்துவிட்டது. டிராக்டரில் இன்னும் டியூப்லெஸ் டயர் வரவில்லை. பஞ்சராகும் போது ஏற்படும் செலவைவிட வேலை கெட்டுப் போவதுதான் ரொம்ப கஷ்டம். வழக்கமாக எனது டிராக்டர் டியூப் பஞ்சரை சரிசெய்யும் அக்தர் அலி, இந்த பவுடரை தண்ணிரில் கலந்து டயருக்குள் செலுத்தினால் பஞ்சர் பிரச்சனையே இருக்காது, டியூபையும் அகற்றிவிடலாம் என்றார்.
முதலில் முன்பக்க டயர்களில் இருந்த டியூப்களை கழற்றிவிட்டு, பவுடரை பயன்படுத்தினேன். கடந்த 2 வருடமாக எந்த பிரச்சனையும் இல்லை. டயரில் குத்திய முள் ஆனியுடன் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது. முள்ளை வெளியே எடுத்தாலும் அந்த இடத்தில் உள்ளே இருக்கும் பவுடர் கரைசல் அடைத்துக்கொள்கிறது. இதனால் பஞ்சரைப்பற்றி கவலையில்லை. இதற்காக டயர் ஒன்றுக்கு ரூ.400 செலவானது. பின்புற சக்கரங்களைப் பொருத்தவரை பெரும்பாலும் உழவுக்குப் பயன்படும் இரும்பு கேஜ் சக்கரம் தான் இருக்கும். என்னைப் பார்த்து இந்த ஏரியாவில் ஏராளமான டிராக்டர் முதலாளிகள் அதன் ட்யர்களில் இந்த பவுடரை பயன்படுத்துகிறார்கள்.
அக்தர் அலியின் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்குமா..?
-கே.பி.சுகுமார்.