இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து, இலங்கை அரசாங்கத்தை கவிழ்த்து, புதிய ஐதேக, ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு சீன உளவு அதிகாரிகள் மூளையாக இருந்து முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இத்தகவல்களை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் முகாமிட்டுள்ள இந்திய உளவுத்துறை (RAW- Research and Analysis Wing) அதிகாரிகள் மோப்பம் பிடித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இது இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தலைமையில் இது தொடர்பான இரகசிய கூட்டம் ஒன்று பத்தரமுல்லவில் நடந்துள்ளது.
இந்த கூட்டத்திற்கு உதய கம்மன்வில வாசுதேவ நாணயக்கார, முன்னாள் ராஜதந்திரி தயான்திலக ஆகியோர் சென்றுள்ளார்கள். இதற்கான அனைத்து ஆலோசனைகளையும், பல சட்ட நுணுக்கங்களையும் இலங்கையின் முன்னாள் தலைமை நீதிபதி சரத் என் டி சில்வா வழங்கியுள்ளார்.
முக்கியமாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதும் மற்றும் தேசிய அரசாங்கம் மீதும் விரக்தியில் இருப்பதால், தினேஸ் குணவர்த்தனவின் திட்டத்தை சுலபமாக நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கை தற்போது எழுந்துள்ளது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்து, பகிரங்க வாக்கெடுப்பு அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலமாக இதை நாடாளுமன்றத்தில் செய்யலாம் என்ற திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பொருளாதார உதவிகள் அனைத்தையும் சீனா வாரி இறைக்கவுள்ளது. இலங்கைக்கு வெளியே முதல் கட்டப் பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், அரசாங்கத்தை கவிழ்த்தால், அடுத்து யாரை பிரதமராக்குவது என்ற குழப்பம் இவர்களிடையே உள்ளது.
ஐ.தே.க. தரப்பு சஜித்தையும், நீலத்தரப்பு அனுர பிரியதர்சனயாப்பா. சுசில்பிரேம் ஜெயந்த் பற்றியும் ஆலோசித்து வருகின்றது.
இதையெல்லாம் இந்திய உளவுத்துறை (RAW- Research and Analysis Wing) அதிகாரிகள் இரகசியமாக மோப்பம் பிடித்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதைத் தடுக்கும் நோக்கில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன அடுத்த வாரம் அமைச்சரவையை கூட்டவுள்ளதாக தெரிகிறது.
-வினித்.