நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் “கருத்துக்கணிப்பு” என்ற பெயரில் பல்வேறு யூகங்களின் அடிப்படையில், பல்வேறு தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன.
பொதுவாக மக்களின் மனநிலைமையை முன்கூட்டியே அறியும் விதமாக பத்திரிகைகள் சார்பில் ‘கருத்துக் கணிப்புகள்’ எடுத்த காலம் மலையேறிப் போய், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும், மனதில் வைத்துக் கொண்டு, தொழில் போட்டியின் காரணமாக ‘இதழியல் தர்மம்’ என்ற ஒன்று இருப்பதையே மனதில் கொள்ளாமல், வஞ்சம் தீர்த்து கொள்வதற்கு இத்தேர்தல் தான் சரியான வாய்ப்பு என்று கருதி, ஒரு சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டன.
இவர்களின் கருத்துக் கணிப்புகள் அனைத்தும் ‘யானையை தடவிப்பார்த்து குருடன் குறிச்சொன்ன கதையாகத்தான்’ இருக்கிறது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை! இத்தேர்தல் முடிவுகளே அதை தெரிவித்து விட்டன.
நாம் வெளியிடும் கருத்துக் கணிப்புகள், அடுத்த சில தினங்களில் வெளிவரப்போகும் அதிகாரப்பூர்வத் தேர்தல் முடிவுகளோடு, எந்த விதத்திலும் கொஞ்சம் கூட சம்மந்தமில்லாமல் இருக்குமேயானால், நம்மை பற்றியும், நம் பத்திரிகையைப் பற்றியும் மக்கள் என்ன நினைப்பார்கள்? ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதற்காக, மக்கள் நம் முகத்தில் காரி துப்ப மாட்டார்களா? என்ற கூச்சமோ, குற்ற உணர்வோ, பயமோ இல்லாமல் இவர்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிடுகிறார்கள் என்றால், இவர்களுக்கு மற்றவர்களை பற்றி விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? உண்மையிலுமே இது நடுநிலையாளர்களுக்கு வேதனையளிக்க கூடிய விசியமாகும்.
ஊடகங்களுக்கு வேண்டுமானால் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிடுவது வியாபாரமாக இருக்கலாம்.
ஆனால், பொய்யான தகவல்களை படிப்பதும், பார்ப்பதும், கேட்பதும் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மற்றும் சம்மந்தப்பட்ட கட்சிக்காரர்களுக்கும் எவ்வளவு பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தும் என்பதை கொஞ்சமாவது ஊடகத்துறையினர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இது போன்றப் போலியான தேர்தல் கருத்துக் கணிப்புகளை, உண்மை என்று நம்பி, எத்தனையோ அப்பாவி தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்ட மற்றும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவங்களும் இங்கு உண்டு.
எனவே, எதிர்வரும் காலங்களிலாவது உண்மையை மட்டும் வெளியிடுவதற்கு ஊடகத்துறையினர் முயற்சிக்க வேண்டும்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com