ஏற்காடு மலைப்பாதையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட சாலைகளை சரிசெய்யும் பணியை, சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் ஏற்காட்டில் அனைத்து துறை அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தினார்.
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் கொண்டப்பநாய்க்கன்பட்டி மற்றும் குப்பனூர் ஆகிய இரு வழி மலைப்பாதைகளிலும் கடந்த திங்கள் இரவு ஏற்பட்ட மண் சரிவினால், பெருமளவில் பாதிக்கப்பட்பட்டது. ஏற்காட்டிற்கு செல்லும் மின்சாரமும் பாதிக்கப்பட்டது. இதனால் ஏற்காடானது எவ்வித தொடர்புமின்றி துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது.
கடந்த இரு தினங்களாக மீட்பு பணியில் நெடுஞ்சாலை துறையினரும், மின்வாரியத்தினரும் ஈடுப்பட்டனர். மழையில் சாய்ந்த 89 மின்கம்பங்களையும் மின்வாரியத்தினர் சரி செய்தனர். நேற்று மாலை ஏற்காடு டவுண் பகுதிக்கு மின் சப்ளை கொடுத்தனர். மற்ற பகுதிகளுக்கு மின் சப்ளை கொடுப்பதற்காக ஈடுப்பட்டு வருகின்றனர். மற்ற பகுதிகளுக்கு நாளை காலைக்குள் மின் சப்ளை கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலை துறையினர் ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மண்மூட்டைகளை தடுப்பு சுவர் போல அடுக்கி, சாலையை வலுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பத் இன்று காலை நேரடியாக ஆய்வு செய்தார்.
பின்னர் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நெடுஞ்சாலை, வருவாய், ஊரக வளர்சி, தோட்டக்கலை, வேளாண்மை, காவல், வனம், மின்வாரியம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் அலைபேசி எண்களும் தகவல் பறிமாற்றத்திற்காக பிறதுறை சார்ந்தவர்களிடம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கேட்டு தெரிந்துக்கொண்டார். பின்னர் இனிவரும் காலங்களில் பேரிடர் ஏற்படும் சமயங்களில் அனைவரும் இணைந்து உரிய நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து விளக்கி பேசினார்.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்த மழையில் 1.30 ஏக்கர் காபி, மிளகு 6 ஏக்கர், கமலா ஆரஞ்சு 2 ஏக்கர், தக்காளி 1 ஏக்கர், பீன்ஸ் 10 ஏக்கர் அளவில் சேதமடைந்ததாகவும், 9,000 சவுக்கு மரங்கள் சாய்ந்ததாகவும் தோட்டக்கலை துறை இணை இயக்குனர் கண்ணன் கூறினார்.
மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு குடும்ப அட்டைகள் இருந்தாலும், இல்லையென்றாலும் 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்னை, 1 கிலோ சர்க்கரை உடனடியாக வழங்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் விஜய் பிரபு கூறினார்.
-நவீன் குமார்.