ஏற்காடு மலைப்பாதை மண் சரிவினால் பாதிப்புக்குள்ளாகி, சரி செய்த பின்னர் மூன்று நாட்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து துவங்கியது. பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கனமழை காரணமாக கடந்த திங்கள் இரவு ஏற்பட்ட மண் சரிவினால், ஏற்காடு செல்லும் கொண்டப்பநாய்க்கன் பட்டி மற்றும் குப்பனூர் ஆகிய இரு மலைப்பாதைகளும் பெரும் பாதிப்புள்ளாகின.
இந்த பாதை வழியாக நேற்று முதல் பைக் மற்றும் கார்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கடந்த மூன்று தினங்களாக பஸ் போக்குவரத்து நிறத்தப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.
நெடுஞ்சாலை துறையினர் கடந்த மூன்று தினங்களாக இரவு,பகல் பாராமல் மழையினால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்து வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட சாலை பாதிக்கப்பட்ட இடங்களில் சிமெண்ட் சிப்ஸ் நிரம்பிய மூட்டைகளை அடுக்கி சாலையை வலுப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். இதனால் மலைப்பாதைகள் கனரக வாகனங்கள் செல்லும் அளவிற்கு ஏதுவாகியது.
மூன்று நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் ஏற்காட்டில் இருந்து சேலத்திற்கு குப்பனூர் வழியாக பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. மதியத்திற்கு மேல் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையான கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இருப்பினும், பாதுக்காப்பின் காரணமாக 40 பயணிகள் மட்டுமே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். சரக்குகளை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலைகள் வழியாக அனுமதிக்கப்படவில்லை.
சேலத்தில் இருந்து கொண்டப்பநாய்க்கன்பட்டி வழியாக சேலம் செல்லும் மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலத்திற்கு அருகில் திங்கள் இரவு பெருமளவிலான மண்சரிவு ஏற்பட்டு அவை அகற்றப்பட்டது.
தற்போது இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பாலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது பாலம் அதிர்வு அடைவதை பொதுமக்கள் உணருகின்றனர்.
எனவே, பாலத்தில் ஏதேனும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்னர், நெடுஞ்சாலை துறையினர் இந்த பாலத்தின் உறுதி தன்மையை உறுதி செய்த பின்னரே பாலத்தின் வழியாக பொதுமக்களை செல்ல அனுமதிக்க வேண்டும்.
–நவீன் குமார்.