பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு 10 மணியளவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்
பிரான்ஸ் நகரில் கிழக்குப் பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் அரங்கினுள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள், பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டதுடன், பெரும்பாலானோரை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்.
இந்த திடீர் தாக்குதலால் பலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பணையக்கைதிகளாக இருந்த 100 பேர் உட்பட 115 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரீஸ் நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் புகுந்த மற்றொரு தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
மேலும், பிரான்ஸ்-ஜெர்மனி இடையேயான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த வடக்கு பாரீஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலியாயினர்.
சம்பவம் நடந்ததையடுத்து அமைச்சரவை கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்திய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே பிரான்சில், தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும், எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தக் கொடூர தாக்குதல் பாரீஸ் நகரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோயுள்ளனர். இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று கிழக்கு பாதுகாப்பு படையினர் சந்தேகிக்கின்றனர்.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, “அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான முயற்சி” என்று கூறியுள்ளார்.
-ஆர்.மார்ஷல்.