திருச்சி, ஸ்ரீரங்கம் கோவிலில் வருகிற 18-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி யாகசாலை பூஜை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
இதனையொட்டி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மத்திய பகுதியில் சங்கு சக்கரம் கூடிய திருநாமம் அமைக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரூ.30 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் பழமை மாறாமல் நடந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி 11 கோபுரங்களுக்கும், 43 உப சன்னதிகளுக்கும் முதல் கட்ட கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இதனை தொடர்ந்து 2-ம் கட்ட மகா கும்பாபிஷேகம் 18-ந் தேதி (புதன்கிழமை) ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், வடக்குவாசல் நுழைவுகோபுரம், கிழக்கு வாசல் வெள்ளை கோபுரம், ஸ்ரீசக்கரத்தாழ்வார் சன்னதி கோபுரம், ராமானுஜர் சன்னதி கோபுரம், கார்த்திகை கோபுரம், ஆரியபடாள்கோபுரம், நாழிக்கேட்டான் கோபுரம், திருக்கொட்டாரம் கோபுரம் (செங்கமலவள்ளி தாயார் சன்னதி நுழைவு வாயில் கோபுரம்) ஆகிய 10 கோபுரங்களுக்கும் மற்றும் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, கருடாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி உள்ளிட்ட 5 முக்கிய சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைப்பெற இருக்கிறது.
2-ம் கட்ட மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகளுக்கான ஏற்பாடுகள் சில நாட்களாக நடந்தன. ஆயிரங்கால் மண்டபத்தில் ஆகம விதிப்படி, 5 மேடைகளும், 9 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டன. மேடைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கஜலெட்சுமி, ஸ்ரீ கருடாழ்வார், ஆழ்வார்கள் போன்ற வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. யாகசாலையை சுற்றி வண்ண வண்ண திரைச்சீலைகள் அமைக்கப்பட்டன.
ஸ்ரீரங்கம் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், யாத்ரி நிவாஸ், மடங்கள் ஆகியவற்றில் வெளிமாநில பக்தர்கள் தங்குவதற்காக முன்பதிவு செய்து வருகிறார்கள்.
-எம்.சசிக்குமார்.