தமிழகத்தைப் போலவே, திருப்பதியிலும் தீபாவளி பண்டிகையில் இருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் 2–வது மலை பாதையில் பாறைகள் உருண்டு விழுந்தது. மேலும் மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தது.
100–க்கும் மேற்பட்ட பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. அதோடு மண் சரிவும் தொடர்ந்த வண்ணம் இருந்தது.
இதனால் 2–வது மலை பாதை மூடப்பட்டது. இதே போல் ஸ்ரீவாரி மெட்டில் இருந்து பக்தர்கள் கால்நடையாக மலையேறும் பாதையிலும் பாறைகள் உருண்டு விழுந்ததால் அந்த பாதையும் மூடப்பட்டது.
திருமலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏழுமலையான் கோவிலை சுற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது, பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏழுமலையான் கோவிலையே ஒரு நாள் இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. திருமலை தேவஸ்தான வரலாற்றில் இப்படி ஒரு இக்கட்டான நிலை இதுவரை ஏற்பட்டதில்லை என்கின்றனர் உள்ளுர்வாசிகள். இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாக அமைந்தது.
இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பதியில் நேற்று (30.11.2015) காலை சாரலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுத்தது. திருமலையில் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் ஏழுமலையான் கோவிலை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கியது.
ஏழுமலையான் கோவில் 2–வது பிரகாரத்தில் வெள்ளம் புகுந்தது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள்.
திருமலை 2–வது மலை பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. குறிப்பாக 7–வது கிலோ மீட்டரில் இருந்து 14–வது கிலோ மீட்டர் வரை பல இடங்களில் பாறைகள் உருண்டு விழுந்தது.
இதனால் போக்குவரத்துத் தடைபட்டது. மழை காரணமாக கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் குறைவாக காணப்பட்டது.
-எஸ்.சதிஸ் சர்மா.