மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் தயவில் அவருக்கு உதவியாளராக இருந்து, உலக நாடுகள் பலவற்றைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்ற பொன்ராஜ், சென்னையில் பெய்த மழை வெள்ளம் மீட்பு பணிகளில் பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்து விட்டதாக சமூக ஊடகங்களின் மூலமாக தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறார்.
இதே போன்ற கருத்தை உலகநாயகன் நடிகர் கமலஹாசனும் தெரிவித்துள்ளார். இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை, உண்மைக்கு புறம்பானவை.
இவர்கள் இருவருக்கும், இவரை போன்ற மனநிலையில் உள்ள நபர்களுக்கும் கீழ்காணும் சம்பவங்களை நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.
சென்னை உயர் நீதி மன்றத்தில், தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் கடந்த 30.11.2015 அன்று டிராபிக் ராமசாமி ஆஜராகி, கனமழையின் காரணமாக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. சாலை மட்டுமல்லாமல் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து விட்டதால், மக்கள் மொட்டை மாடிகளில் நின்றுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், தமிழக அரசு வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளவில்லை. எனவே, மீட்பு பணியை உடனடியாக மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறினார்.
இதற்கு உயர் நீதி மன்ற நீதிபதிகள் சொன்ன பதில் என்ன தெரியுமா? தமிழகத்தில் மிதமிஞ்சிய மழை பெய்கிறது. இதுபோன்ற இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, ராணுவம், கப்பற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு என்று பல துறைகளை சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுதொடர்பான செய்தியையும் நாங்கள் பார்த்தோம். எனவே, அதிகாரிகள் செயல்படவில்லை என்று கூறுவதை ஏற்கமுடியாது. நீங்கள் அரசியல்வாதியைபோல் இங்கு செயல்படக்கூடாது. இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை இதுபோன்ற கோரிக்கையுடன் நீதி மன்றத்திற்குள் வராதீர்கள் என்று, டிராபிக் ராமசாமியை விரட்டி விட்டார்கள்.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தக் கருத்துக்கள் அனைத்தும் அறிவுப்பூர்வமானது மட்டுமல்ல, அனுபவப்பூர்வமானது, நூறு சதவீதம் உண்மையானது.
உண்மை இவ்வாறு இருக்க, டாக்டர் அப்துல்கலாம் அவர்களுக்கு உதவியாளராக இருந்த பொன்ராஜீக்கு இந்த உண்மை புரியாமல் போனதின் மர்மம் என்ன?
தமிழகத்திற்கு அப்பால் தலைமறைவாக இருந்து கொண்டு, சென்னை மீட்பு பணிகளில் பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்து விட்டதாக சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
எதை செய்தியாக்க வேண்டும், எதை செயலாக்க வேண்டும் என்ற வித்தியாசம் கூட தெரியாத இவருக்கெல்லாம் ‘அறிவியல் ஆலோசகர்’ என்ற பட்டம் வேறு! இதுதான் அறிவியல் ஆலோசகராக இருந்த லட்சணமா?
வெள்ளத்தில் மிதக்கும் மக்களிடம் ‘சமூக சேவகர்’ என்ற போர்வையில் விளம்பரம் தேடிக் கொள்ள முயற்சித்த டிராபிக் ராமசாமிக்கும், பொன்ராஜீக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை.
அடுத்து உலகநாயகன் நடிகர் கமலஹாசன் கவனத்திற்கு, நீங்கள் ‘டைட்டானிக்’ என்ற படத்தை எத்தனை முறை பார்த்திருப்பீர்கள்? அதன் மூலம் என்ன பாடம் கற்று கொண்டீர்கள்? ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய நீங்கள்! இப்படி ஆந்தையைப் போல அலறி, மக்களை அதிர்ச்சியடைய வைக்கலாமா?சமூக அக்கறை இல்லாதவன் எப்படி கலைஞனாக இருக்க முடியும்?
இந்நாட்டின் ‘குடிமகன்’ என்கிற அடிப்படையில் கருத்து சொல்வதற்கும், தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கும் உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.
ஆனால், அரசியல் பேசுவதற்கும், செலுத்திய வரிப் பணத்திற்கு கணக்கு கேட்பதற்கும் உங்களுக்கு இதுதான் நேரமா?
வெள்ளத்தில் மூழ்கியவர்களில் எத்தனை பேரை நீங்கள் காப்பாற்ற முயற்சித்தீர்கள்? எத்தனை பேருக்கு அருகில் சென்று ஆறுதல் சொன்னீர்கள்? இந்த லட்சணத்தில் நீங்கள் தூய்மை இந்தியாவின் தூதுவர் வேறு! மனிதாபிமானம் என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கே அருகதையற்ற சினிமா நடிகர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறந்துவிடாதீர்கள் .
உங்களிடம், நடந்த உண்மையை சொல்லட்டுமா? சினிமாவில் நிழல் ஹூரோக்களாக நடித்த பலபேரையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும், இந்த கொடூர வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய நிஜ ஹூரோக்கள் யார் தெரியுமா? தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, காவல்துறை, ராணுவம், கப்பற்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் மீனவ சகோதரர்கள்தான்! இந்த உண்மையெல்லாம் உங்களுக்கு புரியாமல் போனதின் மர்மம் என்ன?
நீங்கள் பார்த்த தொலைக்காட்சிகளிலும், படித்த பத்திரிகைகளிலும் இந்த நிகழ்வுகளெல்லாம் தென்படவில்லையா?
வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய வீரர்களுக்கு யாரும் நன்றி சொல்ல தேவையில்லை. இதுப்போன்று புறம் பேசாமலாவது இருக்கலாம் அல்லவா?
தாங்கள் அதிமேதாவியானவர் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியானால், இந்த ஆதங்கத்திற்கு உண்மையான காரணம்தான் என்ன? என்பதை உலகநாயகன்தான் விளக்க வேண்டும்.
தாங்கள் யாரையாவது ஆதரிப்பதாக இருந்தாலும் அல்லது நேரடியாக அரசியலுக்கு வருவதாக இருந்தாலும் அதை வெளிப்படையாக அறிவித்து விட்டு தாராளமாக வரலாம். அதற்கு தமிழகத்தில் எந்த தடையுமில்லை.
ஆனால், இப்படி இடசந்தில் பில்லு மேய்வதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், நிழல்வேறு, நிஜம்வேறு என்பது, தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
மேலும், இயற்கை சீற்றங்களை யாராலும் வெல்ல முடியாது என்பதற்கு உலகில் ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கின்றன.
300,000 சதுர கிலோமீட்டர்கள் (115,831 sq mi) பரப்பளவைக் கொண்ட பிலிப்பைன்ஸ், பரப்பளவில் உலகில் 64 ஆவது பெரிய நாடாகவும், 100 மில்லியன் மக்கள்தொகையுடன் ஆசியாவில் ஏழாவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாகவும், உலகில் 12 ஆவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாகவும் விளங்குகின்றது.
12 மில்லியன் பிலிப்பைன்ஸ் மக்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதனால் உலகின் மிகப்பெரிய விரிந்து பரவிய புலம்பெயர் இனங்களுள் ஒன்றாகவும் பிலிப்பைன்ஸ் விளங்குகின்றது.
அப்படிப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டில், கோனிப் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், அந்த நாடே உருக்குலைந்து போனது.
தாழ்வான பகுதியில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன.
வெள்ளம் சூழ்ந்த கிராமங்களில் இருந்த பொதுமக்கள் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்த மழை வெள்ளத்தில் ஏராளமானோர் பலியானர்கள்.
இந்த மழை வெள்ளத்தில் 10 இலட்சம் (1மில்லியன்) மக்கள் பாதிக்கப்பட்டனர். 18 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.
இதையெல்லாம் நான் சொல்லவில்லை. பிலிப்பைன்ஸ் தேசியப் பேரிடர் அபாய குறைப்பு மற்றும் மேலாண்மை கவுன்சில் (NDRRMC) பதிவு செய்துள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு ஏதோ ஆதாம், ஏவால் காலத்தில் நடந்தது என்று நினைத்து விடாதீர்கள். இந்த ஆண்டு (2015) கடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற்றது.
இதுப்போன்ற பாதிப்புக்களை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் ஆறுதல் அடைய வேண்டுமே தவிர, எதற்கு எடுத்தாலும் விதண்டாவாதம் பேசுவது, எந்த நன்மையும் பயக்காது.
எனவே, மழை வெள்ளத்திற்கு என்ன காரணம்? எதனால் இப்படி ஆனது? இதற்கு யார் பொறுப்பு? இப்படி கேள்விகளை கேட்பதை முதலில் நிறுத்துவோம். ஏனென்றால், பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் வெட்டிப் பேச்சு உதவாது. பேச்சு பெரிது தான்! ஆனால், செயல் அதைவிட பெரிது என்பதை மனதில் நிறுத்துவோம். நம்மால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். ஏனென்றால், இது மக்களின் உயிர் பிரச்சனை.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com