திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பாலங்களை, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்!

pr061215xx

திருவள்ளூர் மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த பாலங்களை நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். அப்துல் ரஹீம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்ததால் தரைப்பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்தன.

அதன்படி, திருவள்ளூர் வட்டம் புதுச்சத்திரத்தில் திருநின்றவூர்-பெரியபாளையம் செல்லும் பாதையில் முழுவதும் சேதமடைந்த தரைப்பாலத்தையும், அரண்வாயல் அருகே திருமழிசை ஊத்தூக்கோட்டை செல்லும் பாதையில் உள்ள சேதமடைந்த தரைப்பாலத்தையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். 

தொடர்ந்து திருத்தணி-நாகலாபுரம் சாலையில் என்.என்.கண்டிகை கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் கனகமசத்திரம்-தக்கோலம் சாலையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் நெமிலி பகுதியில் பலத்த மழையால் பகுதியாக சேதமடைந்த 102 குடிசை வீடுகளுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினர்.

மழையால் பாதிக்கப்பட்டு கனகமசத்திரம், திருப்பாச்சூர், வெண்மனப்புத்தூர், குமரச்சேரி ஆகிய சிறப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்கள்.

மேலும், வெண்மனப்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்டு முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்புக்குடிநீரும் வழங்கினார்கள்.  

பின்னர், திருவள்ளூர் வட்டம், இளஞ்சேரி கிராமத்தில் மழைநீரால் சூழப்பட்ட நெற்பயிர்களையும் பார்வையிட்டனர்.

இறுதியாக, பூண்டி ஏரியை பார்வையிட்டு தற்போது தேங்கியுள்ள  நீரின் கொள்ளளவு, நீர்வரத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு, ஷட்டரின் உறுதித்தன்மை ஆகியவற்றை பொதுப்பணித்துறைப் பொறியாளர்களுடன் பார்வையிட்டனர்.

-சி.ராஜ்.