பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் பருவ மழையால் 4 தடவை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரும் அழிவு ஏற்பட்டதை நீங்கள் அறிவீர்கள். எனவே, தாங்கள் உடனடியாக தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பேரழிவில் சமுதாய கட்டமைப்புகளுக்கும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் அவரது சொத்துக்களுக்கும் மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தமிழக அரசின் நிதியில் இருந்து நிவாரண உதவி தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே நாங்கள் வெள்ள பாதிப்பு குறித்து நவம்பர் 23–ந்தேதி ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளோம். சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து துணை அறிக்கை ஒன்றை விரைவில் தாக்கல் செய்ய உள்ளோம்.
எதிர்பாராத இந்த தேசிய பேரிடரால் நிறைய வீடுகள் அழிந்து விட்டன. வெள்ளத்தால் நடுத்தர மற்றும் ஏழைகள் தங்களது உடமைகளை இழந்து உள்ளனர்.
அவர்களுக்கு தேவையான சிறப்பு உதவிகளை வழங்க வேண்டியது அவசியமாகும். மத்திய அரசு கீழ்க்கண்ட உதவிகளை வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும்.
- பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வீடுகள், உடைமைகள் மற்றும் வாகனங்களை இன்சூரன்ஸ் செய்து இருக்கலாம். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும். விரைவில் இழப்பீடு கிடைக்கப்பெற்றால் நடுத்தர மக்கள் மற்றும் ஏழைகள் மிக விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவியாக இருக்கும்.
- பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகள், வாகனங்களுக்கு வங்கி கடன் வாங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் செலுத்தி வரும் மாத தவணை தொகையில் சலுகை காட்ட அறிவுறுத்த வேண்டும்.
- சிறப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வங்கி கடன் வழங்க வேண்டும். வங்கி கடன் பெறுவதற்கான உச்சவரம்பில் சலுகைகள் காட்ட வேண்டும்.
- அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சமையலறை கருவிகளுக்கு 31.03.2016 வரை சுங்க வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை மீண்டும் பெற முடியும். இதற்கு தாங்கள் மத்திய நிதி அமைச்சகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com