செம்பரம்பாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆதாரங்களுடன் உரிய விளக்கம் அளித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் உரிய நேரத்தில் திறந்து விடப்பட்டது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன் இன்று (13.12.2015) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் உரிய நேரத்தில் திறந்து விடப்படாததால் சென்னை அடையாறு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து உண்மை நிலை குறித்து தெளிவுப்படுத்த வேண்டிய முக்கியம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு, அரணையாறு, கொசஸ்தலையார், கூவம், கோவளம் நதி படுகைகள் உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூர் ஏரியில் கூடுதலாக இருந்த தண்ணீர் அடையாறு நதியில் ஓடிவந்தது. இந்த தண்ணீர் பாதை 42 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிவருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் கூடுதல் தண்ணீர் திரு நீர் மலைபகுதியில் சேருகிறது. 18வது கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தண்ணீர் அடையாறு நதியில் கலக்கிறது. இந்த நதிமேலும் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடி வந்து சென்னையை வந்தடைகிறது.
செம்பரம் பாக்கம் ஏரி சென்னை நகருக்கு தென் மேற்கே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் அமைந்துள்ளது. அந்த ஏரியின் தண்ணீர் சென்னை நகரமக்களின் குடி நீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது. செம்பரம் பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 24அடியாகும். அந்த ஏரியில் இருந்து முழு தண்ணீர் திறந்து விடப்படும் திறன் 33ஆயிரத்து 60கன அடியாகும். இந்த ஏரியின் நீர் மட்டம் கடந்த 01-11-2015 அன்று 5.06 அடியாக இருந்தது. அதில் 228 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. கடந்த நவம்பர் மாதம் சென்னையில் 1018mm மழை கொட்டியது.
கடந்த 1918-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மிக அதிக அளவு மழையாக தற்போது சென்னையில் கொட்டியுள்ளது. அடையாறின் அனைத்து நீர் பிடி பகுதிகளிலும் நீர் அளவு முழு அளவை எட்டியது. அந்த நீர் பிடி பகுதியின் கூடுதல் தண்ணீர் அடையாறு நதியில் வந்தது.
வரலாறு காணாத மழையால் செம்பரம் பாக்கம் ஏரிக்கு நவம்பர் மாதம் மத்தியில் அதிக அளவில் தண்ணீர் வந்தது. 17-11-2015அன்று அந்த ஏரியில் இருந்து 18ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் அளவு 22.3 அடியாக இருந்ததால் மழைக்கால கூடுதல் தண்ணீர் வெள்ள ஒழுங்கு விதிமுறை கடைபிடிக்கப்பட்டது.
கடந்த 30-11-2015அன்று செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22.05 அடியாக இருந்தது. ஏரிக்கு 750கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஏரியில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஏரியின் முழு கொள்ளவு அளவைக்காட்டிலும் 2 அடி குறைவாக தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்கிற வெள்ள ஒழுங்கு விதிமுறை கடை பிடிக்கப்பட்டது.
பருவ மழை தீவிரமாக இருந்தபோதும் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறையினர் உரிய அளவில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீரை தேக்கி வைத்திருந்தனர்.
கடந்த 30-11-2015 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐ,எம்.டி) தமிழகத்திலும் புதுச்சேரியிலும் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகத்தின் ஒன்றிரண்டு பகுதிகளில் கன மழை என்கிற அர்த்தத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.கன மழை 6.4 செ.மீ முதல் 12.4செ.மீ ஆகவும் மிக அதிக கன மழை 12.4செ.மீ முதல் 24.4செ.மீ ஆக இருக்கும் என குறிப்பிட்டு இருந்தது.
மேலும் வானிலை ஆய்வு மையம் 01-12-2015அன்று வெளியிட்ட அறிவிப்பில் மிக அதிக அளவிலான கன மழை திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெய்யும் என தெரிவித்து இருந்தது. வானிலை மையம் மிக அதிக அளவில் கன மழை பெய்யும் என்றுதான் தெரிவித்து இருந்தது. 50செ.மீக்கு மேல் மழை பொழிவு இருக்கும் என்று குறிப்பிட வில்லை. 50செ.மீ பெய்யும் என நாசா (அமெரிக்கா) மையம் கணித்திருந்தது என்று சில ஊடகங்கள் குற்றம் சாட்டி இருந்தன. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. தாங்கள் இந்த அளவு மழை பெய்யும் என்று கணிக்கவில்லை என்று நாசாவும் விளக்கம் அளித்திருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 01-12-2015அன்று காலை செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. அப்போது ஏரியின் நீர் அளவு 22.08 அடி தொடர்ந்து இருக்கும் வகையில் கடைபிடிக்கப்பட்டது.17-11-2015 முதல் விதிமுறையின் படி அந்த ஏரியில் நீர் அளவு தேக்கி வைக்கப்பட்டது.
01-12-2015முதல் ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்ததால் அந்த நீர் தேக்கத்தில் இருந்து கவனமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீரின் அளவும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டது. நீர் பிடி பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்ததால் அந்த ஏரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தது.
கடந்த 01-12-2015 காலை முதல் மறுநாள் வரை அந்த ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிக அளவில் இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், சென்னை பிராந்தியத்திற்கான நீர் ஆதார நிறுவனத்தின் தலைமை பொறியாளர் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அவர்கள் ஏரியில் இருந்து கூடுதல் நீர் திறப்பதற்கான சிறப்பு உத்தரவை தலைமைச்செயலாளரிடம் இருந்து பெற வேண்டிய நிலையும் ஏற்படவில்லை. டிசம்பர் 1, 2015 வரை இந்த நிலை இருந்தது.
செம்பரம்பாக்கம் ஏரியில் திடீரென ஒரே நாளில் நீர்வரத்து 29 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. மறுநாள் மாலை 3 மணிவரை இந்த நிலை நீடித்தது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியில் பொறியாளர்கள் இருந்தார்கள். ஏரிக்கு உரிய நீர் வரத்து இருக்க வேண்டும் என்பதால் அது தொடர்பான முடிவுகளை அவர்கள் எடுத்தார்கள்.
மேலும், இது சம்மந்தமாக அப்போது பல்வேறு ஊடகங்களில் வெளிவந்த தகவல்களையும், தமிழக அரசின் தலைமைச்செயலாளர் ஞானதேசிகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.