பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று (14.12.2015) எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த மழையால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். நகர்ப்பகுதிகளிலும் கிராமப்பகுதிகளிலும் மழை வெள்ளத்துக்கு ஏழை–எளியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெள்ளத்தால் ஏழை–எளியவர்களின் வீடுகள் உள்பட அவர்களது அனைத்து உடமைகளும் நாசமாகி விட்டன. அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தமிழக அரசு ஏற்கனவே தொடங்கி செய்து வருகிறது.
மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிதி உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. என்றாலும் அவர்கள் முழுமையாக மறுவாழ்வு பெற இதுபோதாது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அழியாத வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என்பதே எனது அரசின் முன்னுரிமையாகும்.
வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய நிரந்தரமான வீடு கட்டி தரப்படும் என்று ஏற்கனவே நான் அறிவித்துள்ளேன். இந்த திட்டம் நகர்ப்புறங்களிலும், கிராமப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.
சென்னையில் அடையாறு, கூவம் நதிக்கரையோரங்களில் வசித்தவர்களில் சுமார் 50 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த இயலாது. இவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
வீடுகளை இழந்த 50 ஆயிரம் குடும்பங்களில் 25 ஆயிரம் குடும்பங்களை உடனே குடியேற்றும் வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் தயார் நிலையில் உள்ளன. இவர்களை அந்த வீடுகளில் குடியேற்றும் பணி இன்னும் 2 வாரங்களில் தொடங்க உள்ளது.
ஓராண்டுக்குள் இந்த 25 ஆயிரம் குடும்பத்தினரும் குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள். அதுவரை அவர்களுக்கு தமிழக அரசு தற்காலிக இருப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுக்கும்.
மீதமுள்ள 25 ஆயிரம் குடும்பங்களுக்கு குறிப்பாக பக்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து கொடுக்கும். இதற்காக 50 ஆயிரம் வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட ஏற்பாடு நடந்து வருகிறது.
ஒவ்வொரு வீடும் 380 சதுரஅடி கொண்டதாக இருக்கும். இதற்கு தலா ரூ.10 லட்சம் செலவாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும்.
சென்னையில் நதிக்கரையோரங்களில் உள்ள இந்த ஏழைகள் நிரந்தர வீடுகளில் குடியேற மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடியை சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் இந்த ஒதுக்கீட்டை செய்ய வேண்டும்.
சென்னையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசின் நிதியின் கீழ் தலா ஒரு வீட்டுக்கு ரூ.1½ லட்சம் என்ற விகிதத்தில் மொத்தம் ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதனுடன் மாநில அரசு ரூ.1 லட்சம் சேர்த்து கொடுக்கும்.
மொத்தம் உள்ள இந்த 2½ லட்சம் ரூபாய் உதவியை கொண்டு ஏழைகள் வீடுகள் கட்டிக் கொள்ள முடியும்.
கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கிராமப்பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த 4 மாவட்டங்களிலும் கிராமங்களில் சுமார் 1 லட்சம் குடிசை வீடுகள் சேதம் அடைந்து விட்டன.
இந்திரா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு நிரந்தர வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.1½ லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இதற்கான உத்தரவை தாங்கள் மத்திய வீட்டுவசதி அமைச்சகத்துக்கும் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் அளிக்க வேண்டும். இதன் மூலம் சிறப்பு நிதி ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாட்டில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com