டெல்லியில் கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி 23 வயதான பிசியோதெரபி மருத்துவ மாணவி ஜோதிசிங் @ நிர்பயா ஓடும் பஸ்சில் 6 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
பின்னர் டெல்லியில் சிகிச்சை பெற்ற அவர், அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி, 2012–ம் ஆண்டு டிசம்பர் 29–ந் தேதி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டங்களும் நடைபெற்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். இளம் குற்றவாளி சிறுவர் சீர்திருத்த காப்பகத்துக்கு அனுப்பப்பட்டான்.
மற்ற 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
பின்னர் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு அப்போது 18 வயது ஆகி இருந்ததால் அவன் இளம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவன் மீதான வழக்கு விசாரணை சிறார் நீதிமன்றத்தில் தனியாக நடத்தப்பட்டது.
சிறார் சட்டத்தின் கீழ் அந்த குற்றவாளிக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த சிறுவனின் தண்டனை காலம் 20.12.2015 -யுடன் முடிகிறது.
இந்நிலையில், அந்த இளம் குற்றவாளியை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணியசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–
3 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த நிலையில், இளம் குற்றவாளி திருந்தி விட்டான் என்றும், அவனால் சமூகத்துக்கு பிரச்சினை ஏதும் இருக்காது என்றும் உறுதியாக தெரியாத நிலையில், அவனை விடுதலை செய்யக்கூடாது.
மேலும், சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில், அவனுடன் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட இளம் குற்றவாளி ஒருவன் தங்கவைக்கப்பட்டு இருக்கிறான். இதனால் அவன் சமூகத்துக்கு விரோதமாக எதிர்மறையான சிந்தனைகளை வளர்த்துக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, அவனை டிசம்பர் 20–ந் தேதி சிறார் சீர்திருத்த காப்பகத்தில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.ரோகிணி மற்றும் நீதிபதி ஜே.ஜெயந்த் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (18.12.2015) தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–
இளம் குற்றவாளி, சிறார் நீதி சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டபடி ஏற்கனவே 3 ஆண்டுகள் தண்டனையை கழித்து விட்டான். எனவே, அவனை சிறார் சீர்திருத்த காப்பகத்தில் டிசம்பர் 20–ந் தேதிக்கு மேல் வைத்திருக்குமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. சிறார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அந்த நபரை விடுவிப்பது பற்றி சிறார் நீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும்.
சிறார் நீதிமன்றம் அந்த சிறுவன், அவனது குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அந்த சிறுவனுக்கான மறுவாழ்வு திட்டம் ஒன்றை வகுத்து அவனுடைய மனமாற்றம் மற்றும் முன்னேற்றத்தை கண்காணிக்க வேண்டும். சிறார் சீர்திருத்த காப்பகங்களில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்களின் மனமாற்றங்கள் மற்றும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான நடைமுறையை டெல்லி அரசாங்கம் வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com