ஏற்காட்டில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வெள்ளக்கடை பஞ்சாயத்திற்குட்பட்ட பெரியேரிக்காடு கிராமம். இந்த கிராமம் வரை ஏற்கெனவே தார்சாலை வசதி உள்ளது.
இந்த கிராமத்திற்கு அருகில் 1 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்காடு ஒன்றியத்தலைவர் அண்ணாதுரைக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. இது தவிர அந்தப்பகுதியில் 4 வீடுகளும் உள்ளது.
இந்த பகுதிக்கு தமிழ்நாடு கிராமப்புறச் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை ஏற்படுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது. மேலும், இந்த பகுதி பெயர் ஏதும் வைக்கப்படாத பகுதியாகும்.
பொதுவாக மலைப்பகுதிகளில் 150 வீடுகள் உள்ள பகுதிகளுக்கும், மற்ற பகுதிகளுக்கு 500 வீடுகள் உள்ள பகுதிகளுக்கும்தான் சாலை அமைத்து தர வேண்டும் என்பதுதான் அரசு விதிமுறையாகும். ஆனால், 4 வீடுகள் மட்டும் உள்ள பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தருவது எந்த வகையில் நியாயம்? என்கின்றனர் வெள்ளக்கடை மக்கள்.
தனது எஸ்டேட் இருப்பதனால் தான் 4 வீடுகள் உள்ள பகுதிக்கு ஏற்காடு ஒன்றியத்தலைவர் அண்ணா துரை ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்து வருகிறார். இவர் தனது சுயநலத்திற்காகவும், சொந்த விசயத்திற்காகவும் தனது அதிகாரத்தை தவறாக பிரயோகித்துள்ளார்.
எங்களது நீண்டகால கோரிக்கையான வெள்ளக்கடை பஸ் நிறுத்தம், வெள்ளக்கடையில் தண்ணீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் வெள்ளக்கடை ஊராட்சி மக்கள்.
இது குறித்து ஏற்காடு ஒன்றியத்தலைவர் அண்ணாதுரையிடம் விசாரித்தோம்.
புகார் கூறப்படும் அப்பகுதியில் எனக்கு பூர்வீக தோட்டம் இருப்பது உண்மைதான். ஆனால், அங்கு 4 வீடுகள் உள்ளது என்பது தவறான தகவல். அங்கு 45- க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது என்பதுதான் உண்மை. எனது தோட்டத்திற்கு ரோடு போடுகிறேன் என்பது பொய்யான புகார். அந்த சாலை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டால் அப்பகுதி மக்கள் பெரிய அளவில் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்றார்.
இது குறித்து வெள்ளக்கடை வி.ஏ.ஓ. செந்திலிடம் கேட்டபோது, சாலை போடுவதாக கூறப்படும் பகுதியில் மிகவும் குறைந்தளவிலான வீடுகள் தான் உள்ளதாக கூறினார்.
அந்த பகுதிக்கு நாம் நேரில் சென்று பார்வையிட்டோம், 4 தோட்ட வீடுகள் மட்டும்தான் அங்கு இருக்கிறது.
-நவீன் குமார்.