திருச்சி- தஞ்சை சாலையில் சர்வீஸ்ரோடு முழுமையாக அமைக்காதக்காரணத்தால், துவாக்குடி முதல் பழைய பால்பண்ணை ரவுண்டானா வரை, அடிக்கடி தொடர் விபத்துக்கள் நடைப்பெற்று வருகிறது.
இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம், தனியார் பேரூந்துகள் ஒன்றோடு ஒன்று, போட்டிப்போட்டுக் கொண்டு பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கு முயற்சிக்கும் போது, சர்வசாதாரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.
தனியார் பேரூந்துகள் அனைத்தும் போக்குவரத்து விதிகளை ஒரு பொருட்டாவே நினைப்பதில்லை. கலெக்ஷன் மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம், தனியார் பேரூந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கலெக்ஷன் அடிப்படையில்தான் கமிஷன் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மாதச் சம்பளம் என்பது மிகவும் குறைவு. அதனால்தான் ஏர் ஹாரனில் கையை வைத்தால் இவர்கள் எடுப்பதும் இல்லை. வழக்குகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதும் இல்லை.
இப்படி தறிக்கெட்டு ஓடும் தனியார் பேரூந்துகளை காவல்துறையினர் கண்டு கொள்வதே கிடையாது. இருசக்கர வாகனத்தில் வருபவர்களைதான் வழிமறித்து வாகனச் சோதனைச் செய்கிறார்களே தவிர, தறிக்கெட்டு ஓடும் தனியார் பேரூந்துக்களையும், அதிவேகமாக வரும் தண்ணீர் லாரிகளையும், காவல்துறையினர் கடைக்கண்ணால்கூட கவனிப்பதில்லை. இதற்கு காரணம் என்னவென்றும் தெரியவில்லை.
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால், காலை முதல், இரவு 10 மணி வரை போக்குவரத்துக் காவல்துறையினரும், ரோந்து பணியில் ஈடுப்படும் காவலர்களும் அந்த பகுதிகளில் முகாமிட்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.
போக்குவரத்துப்பணிகளில் ஈடுப்படும் காவல்துறையினர் பணி நேரத்தில் ‘வாக்கி-டாக்கி’ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். ‘செல்போன்’ பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை கட்டாயப்படுத்த வேண்டும். ஏனென்றால், போக்குவரத்துப்பணியில் இருக்கும் ஒரு சில காவலர்கள் மணிக்கணக்கில் செல்போனில் தங்கள் சொந்தக் கதையைப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்களே தவிர, போக்குவரத்தைக் முழுமையாக கண்காணிப்பதே இல்லை.
எனவே, தறிக்கெட்டு ஓடும் தனியார் பேரூந்துக்களை ஒழுங்குப்படுத்தினால் மட்டும்தான், சாலையில் மற்ற வாகனங்களும், மக்களும் நிம்மதியாக பயணம் செய்ய முடியும். இதற்கு காவல்துறையினரின் தொடர் கண்காணிப்பும், போக்குவரத்து (RTO) அதிகாரிகளின் கண்டிப்பான உத்தரவும்தான் பயனளிக்கும்.
ஏனென்றால், மனித உயிர்கள் மகத்தானது, அந்த இழப்புகளை எந்த இழப்பீடும் ஈடுச்செய்ய இயலாது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com