திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட, கீழமுல்லக்குடி ஊராட்சி, காந்திபுரம் கிராமத்தில் வசித்து வரும் ராதா, சகுந்தலா தம்பதிகளின் மூத்த மகன் ரா.பாலக்கிருஷ்ணன் (வயது 33), இவருக்கும், திருச்சி கீழகல்கண்டார்கோட்டையை சேர்ந்த மஞ்சுளாதேவி என்பவருக்கும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக, கணவன் ரா.பாலக்கிருஷ்ணனை பிரிந்து மஞ்சுளாதேவி கீழகல்கண்டார்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (10.01.2016) மாலை 4 மணியளவில் காட்டூர் வரை சென்று வருவதாக தன் தாய், தந்தையரிடம் சொல்லி விட்டு பாலக்கிருஷ்ணன் சைக்கிளில் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் பாலக்கிருஷ்ணன் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இன்று (11.01.2016) காலை 7 மணியளவில் புத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலர், வயலுக்கு செல்வதற்காக பாப்பாக்குறிச்சிக்கு செல்லும் சாலை வழியாக சென்றபோது, புத்தாபுரம் அருகே ஜெயலெட்சுமி என்கிற கோனார் அம்மாள் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இருந்த, சிறிய பூவரசம் மரக்கிளையில் பாலக்கிருஷ்ணன் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, காந்திபுரம் கிராமத்திற்கு சென்று இத்தகவலை தெரிவித்தனர். இதைக்கேட்ட பாலக்கிருஷ்ணனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் அனைவரும் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர்.
இதுக்குறித்து திருவெறும்பூர் காவல்நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், பாலக்கிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக, திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பாலக்கிருஷ்ணனின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியில் இருந்து ரத்தம் கசிந்து இருப்பதாலும், பிணமாக தொங்கிய பாலக்கிருஷ்ணனின் கால்பகுதி தரைப்பகுதியில் ஊன்றியப்படியே இருப்பதாலும், அவர் ஓட்டி சென்ற சைக்கிள் அவர் உடலை ஓட்டியவாரே இருப்பதாலும், அவர் பிணமாக தொங்கிய பூவரசம் மரத்தின் கிளை சிறியதாகவும், கொம்பு கைக்கெட்டும் உயரத்தில் இருப்பதாலும், மேற்படி பாலக்கிருஷ்ணன் அந்த இடத்தில் தூக்கிட்டு தொங்கியிருக்க வாய்ப்பில்லை.
எனவே, இவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் அனைவரும் ஒருமித்தக் குரலில் கூறுகின்றனர்.
பாலக்கிருஷ்ணனின் பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தால்தான் இது கொலையா? தற்கொலையா? என்ற கேள்விக்கு விடைக்கிடைக்கும்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com