மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் இந்திய பிராணிகள் நல வாரியம், பிராணிகள் வதைக்கப்படுவதை தடுக்கும் பீட்டா எனும் அமைப்பு, பெங்களூரைச் சேர்ந்த ஒரு அரசு சாரா அமைப்பு உள்பட 6 அமைப்புகள் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ். தாக்கூர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (12.01.2016) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு விசாரணை அமர்வில் இருந்து நீதிபதி ஆர்.பானுமதி திடீரென விலகினார். இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு எதிர்ப்பு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோரைக் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இருவரும் 6 மனுக்களையும் விசாரித்தனர்.
6 மனுதாரர்களின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்தது சட்ட விரோதம் என்று வாதிட்டனர்.
இந்திய பிராணிகள் நல வாரியம் சார்பில் வக்கீல் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு ஏற்கனவே தடை உத்தரவு உள்ளது. அதை சட்டப்படி மீற முடியாது.
மேலும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மத்திய அரசு அறிவிக்கையில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இது சரி அல்ல. எனவே, ஜல்லிக்கட்டு அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், ‘‘புதிய அறிவிக்கையில் காளை வதை தொடர்பான அம்சங்களை கவனத்தில் கொண்டுள்ளோம். எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்ததில் சட்டவிதி மீறல் இல்லை’’ என்றார்.
மத்திய அரசு தரப்பில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், ‘‘ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்ததில் எந்த விதிமீறலும் இல்லை. அறிவிக்கையில் புதிய அம்சம் சேர்ப்பது தவறல்ல. தேவைப்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு புதிய நிபந்தனைகளை விதித்து உத்தரவிடலாம்’’
தமிழ்நாட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் வதை செய்யப்படுவதில்லை. ஸ்பெயின் நாட்டில் காளை வதைக்கப்படுவது போல ஜல்லிக்கட்டில் நடப்பதில்லை. இது வீர விளையாட்டு’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரமணா இருவரும் உடனடியாக தங்கள் தீர்ப்பை வெளியிட்டனர். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இடைக்கால தடை விதிப்பதாக அறிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மும்முரமாக ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய தீர்ப்பு தமிழர்களின் கலாச்சார உணர்வுக்கு எதிராக அமைந்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் வதை செய்யப்படுகிறது என்று, இந்திய பிராணிகள் நல வாரியம் சொல்வதை வேதவாக்காக ஏற்று, மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் இனி நடக்கவே நடக்காது என்ற முடிவு தெரிந்தால், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் அடிமாட்டிற்காக அநியாயமாக விற்கப்படும் ஆபத்து உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் என்ன பரிகாரம் செய்ய போகிறார்கள்?
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com