ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்கும் படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டத்தை வெளியிடவேண்டும் என்று நான் ஏற்கனவே கடந்த 22.12.2015 அன்று உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்துவதற்கு வழிவகை செய்து மத்திய சுற்றுப்புறசூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சகம் 07.01.2016 தேதியிட்ட அறிவிக்கையை வெளியிட்டது.
இந்த அறிவிக்கை கிடைத்ததை அடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு விரிவான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சகம், கடந்த 7-ந் தேதி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு 12-ந் தேதி இடைக்கால தடைவிதித்துள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கையின்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இயலாது.
பொங்கல் விழாக்கள் 14-ந் தேதி முதல் தொடங்கவிருப்பதால், தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து, தமிழகத்தின் வளம் மிக்க கலாசாரத்தில் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய நிகழ்ச்சியில், ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, இந்த பிரச்சினையின் அவசரம் கருதி, மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த ஏதுவாக, அவசர சட்டம் ஒன்றை உடனடியாக பிறப்பிக்கவேண்டும் என்று உங்களை மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இந்த பிரச்சினையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமது கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com