ஏற்காடு படகு இல்லத்தில் படகு சவாரி செய்த ஜோடி படகு கவிழ்ந்து ஏரியில் விழுந்தனர். லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர்.
ஏற்காட்டில் உள்ள படகு இல்ல ஏரியில் மோட்டார் படகு, துடுப்பு படகு, மிதி படகு என மூன்று வகையான படகுகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மிதி படகுகளையே விரும்பி படகு சவாரி செய்கின்றனர்.
இன்று காலை 12 மணியளவில் சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் மகன் விஜய்(வயது 29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரியா (வயது 29) ஆகியோர் மிதி படகில் படகு சவாரி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பயணம் செய்து கொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து அவர்கள் தத்தளித்தனர்.
அதை கண்ட படகு இல்ல ஊழியர்கள் விரைந்து சென்று ஏரியில் விழுந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததனால் அவர்கள் உயிர் தப்பித்தனர்.
படகில் இருந்து தவறி விழுந்த விஜய் கூறியதாவது:
“நாங்கள் படகில் ஏறும் போதே படகு ஒரு சைடு சாய்ந்தவாறு இருந்தது. பின்னர் பாதி தூரம் சென்றபோது படகினுள் அதிகளவில் தண்ணீர் புகுந்து விட்டது. கரைக்கு நாங்கள் திரும்ப முயல்வதற்குள் படகு கவிழ்ந்துவிட்டது. நல்ல வேளை நாங்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினோம்” இவ்வாறு கூறினார்.
-நவீன் குமார்.