கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஈரோடு வந்து திருப்பத்தூர் மார்க்கமாக பெங்களூர் செல்லும் ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 4 மணி அளவில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த ஜோலார் பேட்டை அருகே உள்ள சோமநாயக்கன் பட்டி– பச்சூர் இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது.
திடீரென பயங்கர சத்தத்துடன் ரெயில் தடம் புரண்டது. இதில் ரெயிலின் எஸ்.6, எஸ்.7, எஸ்.8, எஸ்.9 ஆகிய 4 பெட்டிகள் முழுவதுமாக தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது.
மேலும், அடுத்தடுத்த 4 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு இறங்கி நின்றது.
அந்த இடத்தில் ரயில் 30 கி.மீ. வேகத்தில் மெதுவாக சென்றதால் இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் பிழைத்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் 4 பெட்டிகளில் இருந்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த அப்பகுதி மக்களும் திரண்டு வந்து உதவி செய்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சம்பவ இடத்துக்கு வரவழைக்ககப்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், அருகே உள்ள சோமநாயக்கன் பட்டி, பச்சூர் உள்ளிட்ட கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் உள்ளூர் மருத்துவ மனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயம் அடைந்தவர்கள் விவரம் படுகாயம் அடைந்தவர்க ளில் 13 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக நாட்டறம் பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரெயில் தடம் புரண்டதை அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் நந்தகோப£ல், போலீஸ் சூப்பிரெண்டு செந்தில்குமாரி, துணை சூப்பிரெண்டு வனிதா மற்றும் ரெயில்வே அதிகாரி கள் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத் தினர்.
விபத்துக்குள்ளான ரெயிலில் பயணம் செய்த பயணிகளை அரசு பஸ்கள், தனியார் கல்லூரி வாகனங்கள் மூலம் மீட்டு உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தடம் புரண்ட எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் பகுதியில் இருந்து முதல் 3 பெட்டிகள் மட்டும் கழற்றி விடப்பட்டது. பின்னர் அரக்கோணம், ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து வர வழைக்கப்பட்ட கிரேன் வாகனங்கள் மூலம் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டிகள் மீட்கும் பணிகள் நடைபெற்றது.
இந்த விபத்து காரணமாக பெங்களூர் வழித்தடத்தில் செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் குறித்த தகவல் அறிய தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்து உள்ளது.
இந்த விபத்து குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-சி.கதிரவன்.