திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியம், இளங்குன்னி கிராமத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜாவிடம், பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கையின்படி, சேலத்திற்கு புதிய அரசுப் பேருந்து வழித்தடம் தொடங்கி வைக்கப்பட்டது.
செங்கம் அரசுப் பணிமனைக்கு உட்பட்ட இந்தப் பேருந்து, திருவண்ணாமலையில் காலை 5.55மணிக்கு புறப்பட்டு, செங்கம் மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, இளங்குன்னி, நீப்பத்துரை, தீர்த்தமலை, அரூர் வழியாக காலை 10.45க்கு சேலம் சென்றடையும்.
சேலத்தில் காலை 11மணிக்கு அதே வழித்தடத்தில் திரும்பி வந்து, மாலை 4.15 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.
திருவண்ணாமலையில் மீண்டும் மாலை 5.30மணிக்கு கிளம்பி அதே வழித்தடத்தில் அரூர் வரை சென்று திரும்பி, இரவு 10.30 மணிக்கு செங்கம் வந்தடையும்.
செங்கத்தில் காலை 6.55 மணியும் பகல் 3.15 மணியும், மாலை 6.30 மணியும், இளங்குன்னி கிராமத்தில் காலை 7.50 மற்றும் பகல் 2.15மணியும் இந்த புதிய பஸ் வழித்தடத்தின் நேரமாகும்.
இந்த புதிய அரசு பஸ் வழித்தடம் தொடக்க விழா இளங்குன்னி கிராமத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளரும், மாவட்ட வணிக வரி ஆலோசனைக்குழு உறுப்பினருமான மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சடையன், கூட்டுறவு சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பெருமாள் நகர் ராஜன் புதிய பேருந்து வழித்தடத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியினை வாழ்த்தி வனரோஜா எம்.பி., செங்கம் தொகுதி எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் கணேசன், புதுப்பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புருஷோத்தமன், போக்குவரத்து துறை மண்டல அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர். இறுதியில் செங்கம் பணிமனை மேலாளர் பார்த்திபன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்கள் வெங்கட்ராமன், ஜோதி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் கண்ணக்குருக்கை கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
– செங்கம் மா.சரவணக்குமார்.