இறுதி தீர்ப்பு வரும் வரை கெயில் நிறுவனம் தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் பதிப்பில் ஈடுபடக்கூடாது: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம்!

JAYALALITHAAtncm lr toPrime Ministertncm lr toPrime Minister2tncm lr toPrime Minister3

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–

கெயில் நிறுவனம் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய திட்டப்படி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அது இந்த 7 மாவட்டங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வேளாண் சொத்துக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடும்.

இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் பயத்தையும், போராட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு பொது மக்களிடம் கருத்து கேட்டது.

கருத்துக் கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்ட 7 மாவட்ட விவசாயிகள், தங்களது விவசாய நிலம் வழியாக எரிவாயு குழாய் பதிக்கப்பட்டால் அது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பை பதிவு செய்தனர். அந்த எதிர்ப்பு தகவல்கள் மற்றும் மற்ற உரிய ஆவணங்கள் மூலம் இந்த திட்டம் பற்றி மாநில அரசு மிகுந்த கவனமுடன் ஆய்வு செய்தது.

கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் 310 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 20 மீட்டர் அகலத்துக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் லட்சக்கணக்கான மாமரம், பலாமரம், தென்னை மரங்களை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடியது.

எரிவாயு குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளில் நிலத்தை தோண்டும் பட்சத்தில் அந்த வழித்தடத்தில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் பழ வகை மரங்களை வெட்ட வேண்டியதிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு வழி காட்டுதலின்படி சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில், ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு பதில் 10 மரங்களை நட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த பகுதியில் 12 லட்சம் மரங்களை நடுவது என்பது கெயில் நிறுவனத்தால் செய்ய முடியாத காரியமாகும். மேலும், எரிவாயு குழாய் பதிப்பதால் குளம் மற்றும் கிணறுகளில் இருந்து வேளாண் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் பெறுவதும் இயலாததாகி விடும்.

எரிவாயு குழாய் பதிப்பதால் பெரும்பாலான நிலம் பாழாகி விடும். அவற்றில் இருந்து கிடைக்கும் வருவாய் முழுமையாக முடங்கி விடும். எனவே, இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது.

பெட்ரோலியம் மற்றும் கனிமங்களுக்கான குழாய் சட்டம் 1962-ன்படி குடியிருப்பு திட்டங்கள் அல்லது வீடுகளுக்கு அருகில் அல்லது நிரந்தர கட்டிடங்களுக்கு அருகில் எந்தவித குழாயும் பதிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு ஆந்திராவில் கெயில் நிறுவனம் பதித்துள்ள எரிவாயு குழாய் வெடித்து விபத்து ஏற்பட்டது போல தமிழ்நாட்டிலும் ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைத்துள்ளது. அங்கு தனியார் நிலங்களில் குழாய் பதிக்கப்படவில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 02.04.2013 அன்று கெயில் நிறுவனத்திடம் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டது.

விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கு பதில் நெடுஞ்சாலை ஓரமாக குழாய் அமைக்கும்படி கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தன் தீர்ப்பில், ‘‘எந்த வழியாக குழாய் பதிப்பது என்று உத்தரவிடும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும், இதற்கான சட்டம் மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்டது‘‘ என்று கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழக அரசு மதிக்கிறது. இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பெட்ரோலியம் மற்றும் கனிமங்களின் குழாய் சட்டம்–1962 என்பது சமுதாய பாதிப்பு ஆய்வுகள் நடத்துவதில் இருந்து விலக்கு பெற்ற மத்திய அரசின் 13 திட்டங்களில் ஒன்றாகும். இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

பெட்ரோலியம், கனிமங்கள் குழாய்கள் சட்டம்–1962 என்பது நிலம் கையகப்படுத்தும் சட்டம் அல்ல. ஆனால், பெட்ரோலியம் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்கு குழாய் பதிக்க நிலம் கையகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக வழங்கப்படும் இழப்பீடு மிக, மிக குறைவாகும். அதை சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்துள்ளது.

எரிவாயு கொண்டு செல்வதற்காக குழாய் அமைக்கும் போது நிறைய இடங்களை கையகப்படுத்த வேண்டியதிருக்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்து விடும். அந்த நிலை ஏற்பட கூடாது.

கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க திட்டமிட்டுள்ள பகுதிகளில் பழங்கள் தரும் மரங்களை வளர்ப்பது பிரதானமானதாக உள்ளது. அதன் அருகில் வேறு எந்த பயிரையும் பயிரிட இயலாது.

எனவே பெட்ரோலியம், கனிமங்களுக்கான குழாய்கள் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதில் சமுதாய பாதிப்பை கணக்கீடுவது சேர்க்கப்பட வேண்டும். மேலும், அந்த சட்டமானது நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 போன்று நியாயமான இழப்பீடு வழங்குவதாகவும், நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படையான தன்மை போன்று இருக்க வேண்டும்.

கெயில் நிறுவனம் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை ஓரமாக எரிவாயு குழாய் பதிப்பதே சிறந்தது என்று தமிழக அரசு உறுதியாக நம்புகிறது. மேலும், அது விவசாயிகளுக்கு குறைந்த பட்ச எதிர்ப்பையே ஏற்படுத்தும் என்பதால், அந்த வழிப்படியே விரைவாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

எரிவாயு குழாயை நெடுஞ்சாலை ஓரமாக பதிப்பது பற்றி ஆய்வு செய்ய ஏற்கனவே தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அந்த குழுவில் இடம் பெறுமாறு கெயில் நிறுவனத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதன் மூலம் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு ஏழை விவசாயிகளை பாதிக்காமல், திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைவரும் ஏற்கும் தீர்வு காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கே இதில் பொறுப்பு உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருப்பதால், தாங்கள் உடனே இந்த விவகாரத்தில் தலையிட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

  1. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க மத்திய அரசின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அந்த சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
  2. இறுதி தீர்ப்பு வரும் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிப்பில் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
  3. பெட்ரோலியம், கனிமங்களுக்கான குழாய் பதிப்பு சட்டம் 1962-ல் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

இந்தநிலையில் தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் கெயில் நிறுவனமும் இடம் பெற உத்தரவிட வேண்டும். மிகவும் உணர்ச்சிப்பூர்வமான இந்த விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். எரிவாயு குழாயை நெடுஞ்சாலை ஓரமாக அமைப்பதே இதற்கு தீர்வாகும் என்பதே தீர்வாக இருக்கும். எனவே, தாங்கள் இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com