தார்சாலை அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம்: போஸ்டர் ஒட்டிய கிராம மக்கள்!   

ye0802P1

ye0802P2

ஏற்காட்டில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்களம் பஞ்சாயத்திற்குட்பட்ட தாழ் கோவிலூர் மற்றும் மேல்கோவிலூர் கிராமங்கள். இந்த இரு கிராமங்களுக்கும் சாலை வசதி கிடையாது. இங்கு 150-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் தங்களது கிராமங்களில் அத்தியாவசிய தேவைகளான உயர் நிலைப் பள்ளிக்கூடம், கல்லூரி, நியாய விலை கடை, தபால் அலுவலகம் உள்ளிட்ட வசதிகள் ஏதும் இன்றி வசித்து வருகின்றனர்.

மேலும், சாலை வசதி இல்லாததால் கருவுற்ற தாய்மார்கள் உட்பட உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தூளி கட்டி தூக்கி செல்வதாகவும், பள்ளி செல்பவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் செல்வதாகவும், 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடிவது கிடையாது, ஊரில் உள்ள துவக்க பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் காட்டு பகுதியில் உயிருக்கு பாதுகாப்பின்றியே வந்து செல்கின்றனர்

மேலும், தூய்மையான குடிநீர், மின்சாரம், மருத்துவம், சுகாதாரம் வசதிகள் ஏதும் இல்லை. இத்தகைய காரணங்களால் தங்கள் கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் குடும்பத்துடன் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விடுகின்றனர்.

எனவே, இந்த கிராம மக்களும் அகில இந்திய கிஸான் மகா சபை அமைப்பினரும் இணைந்து வரும்  சட்டசபை தேர்தலுக்குள் தங்கள் பகுதிக்கு தார்சாலை அமைக்காவிட்டால் தேர்தலில் தங்கள் பகுதியை சேர்ந்த யாரும் நிச்சயமாக வாக்களிக்க மாட்டோம் என்று ஏற்காடு தாலுக்கா முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 -நவீன் குமார்.