ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து முளுவி கிராமத்திற்கு வந்துகொண்டிருந்த பேருந்தை நிறுத்தியதால் பொதுமக்கள் பஸ் மறியல் செய்ய முயற்சி!

ye1502P2

ye1502P1

ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து முளுவி கிராமத்திற்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தியதால் பொதுமக்கள் பஸ் மறியல் செய்ய முயற்சித்தனர்.

ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது முளுவி கிராமம். அந்த கிராமத்திற்கு கடந்த புதன்கிழமை வரை அரசு பேருந்து சென்று வந்தது. இந்த பேருந்தில்தான் அந்த கிராமத்தில் இருந்து ஏற்காட்டில் உள்ள பள்ளிக்கு வரும் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு வரும் தொழிலாளர்கள் என அனைவரும் வந்து கொண்டிருந்தனர். 

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்காட்டில் இருந்து முளுவி வழியாக சுரக்காப்பட்டி கிராமத்திற்கு புதிய மினி பேருந்து இயக்கம் துவங்கப்பட்டது. இதனால் முளுவி செல்லும் பேருந்து நிறுத்தப்பட்டது. சுரக்காப்பட்டி மினி பேருந்து சுரக்காப்பட்டி கரடியூர், முளுவி, நாகலூர் என 4 கிராம மக்களை ஏற்றிக்கொண்டு ஏற்காட்டிற்கு காலை 10 மனியளவில் வருகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், கூலி தொழிலாளிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அது மட்டுமின்றி மினி பேருந்து என்பதால் இடவசதி போதாமலும் மக்கள் கஷ்டப்படுகின்றனர். 

எனவே, தங்கள் கிராமத்திற்கு இயக்கப்பட்டு வந்த முளுவி பேருந்தை இயக்க கோரி முளுவி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏற்காடு பஸ் நிலையத்தில் பஸ் மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவல் அறிந்து வந்த ஏற்காடு காவல் உதவி ஆய்வாளர் ஹரி தலைமையிலான காவல் துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்தனர். உடனே, பொதுமக்கள் ஏற்காடு தாலுக்கா அலுவலகம் சென்று இது குறித்து முறையிட்டு மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணன், சேலம் கலெக்டரிடம் இது குறித்து பேசி இந்த பிரச்சனையை சுமூகமாக முடிப்பதாக உத்திரவாதம் அளித்தார். வட்டாட்சியர் அளித்த உத்திரவாதத்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவில்லையெனில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரித்தனர்.

ஓவர் லோடு ஓட்ட மறுத்து பஸ்சை நிறுத்திய டிரைவர்:

ye1502P3

மதியம் 2 மணியளவில் சுரக்காப்பட்டி மினிபேருந்து 100-க்கும் மேற்ப்பட்ட பயணிகளுடன் ஏற்காட்டில் இருந்து கிளம்பி, பொட்டானிக்கல் கார்டன் அருகே செல்லும் போது, வழியில் நெடுஞ்சாலை துறை சாலை பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் ஓவர்லோடு என்பதால் பஸ்சை நிறுத்தினார். இதனால் பஸ்சில் வந்த மக்கள் பலர் இறங்கி வாடகை டெம்போக்கள் மூலம் தங்கள் கிராமத்திற்கு சென்றனர்.

 -நவீன் குமார்.