யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், ‘கலாசாரத்தை’ பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல் மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் முகச்சவரம் (கிளீன் ஷேவ்) செய்திருக்க வேண்டும், டிசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை கலைப்பீடம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்புகள் தம்மைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாக மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைத்துறை மாணவர்களின் உடை மற்றும் அவர்களின் கலாசார பண்பாடு தொடர்பிலும் பல்கலைக்கழகத்திலும், சமூகத்திலும் வெளிப்பட்ட கரிசனையை அடுத்து, கலைப்பீட ஆசிரியர்கள் மட்டத்தில் இந்த விசயம் கலந்துரையாடப்பட்டதாக தெரிகிறது.
இது கட்டாய விதிமுறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதுடன், முஸ்லிம் மாணவர்கள் உட்பட யாரையும் வற்புறுத்தும் நோக்கம் இல்லை என்றும் தெரிகிறது.
ஆனால், பெண்களை சேலை அணியச் சொல்லி விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
-வினித்.