திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செங்கம் தனி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மற்றும் செங்கம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியுமான சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் அதிகாரியும் செங்கம் தாசில்தாருமான காமராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணை தாசில்தார்கள் நீதிச்செல்வன், மலர்கொடி, வருவாய் ஆய்வாளர் மணவாளன் உள்ளிட்ட அதிகாரிகளும் செங்கம் தனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்கம் தண்டராம்பட்டு ஒன்றியங்களில் இருந்து அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் மதியழகன், ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன், நகர பேரவை செயலாளர் குமார், பேரூராட்சி உறுப்பினர் வெங்கடேசன், தி.மு.க., சார்பில் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அப்துல் சத்தார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மாவட்ட பொருளாளர் குமார், நகர தலைவர் ஆசை முஷீர் அஹமது, பா.ம.க. சார்பில் ஒன்றிய குழு துணைத்தலைவர் சாமிநாதன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிஞ்சூர் சுரேஷ், ம.தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் உதயசங்கர், ஒன்றிய செயலாளர்கள் நாதன், ராஜா, தே.மு.தி.க., சார்பில் நகர செயலாளர் முரளிதரன் மற்றும் பா.ஜ.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், குடியரசுக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விதி மீறல் நடந்தால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். கட்சி தலைவர் வருகை, பேரணி பொதுக்கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும். சுவர் விளம்பரங்களுக்கு வீட்டு உரிமையாளர் அனுமதி பெற வேண்டும். அதிக சத்தம் தரும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கு படிப்புக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு அனைத்து சான்றுகளும் உடன் இருக்க வேண்டும்.
பணம் எடுத்து செல்பவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் எதற்காக? எங்கிருந்து எடுத்துச்செல்லப்படுகிறது என்ற உரிய ஆவணம் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் கூட்டங்களில் யாரையும் தாக்கி பேசக்கூடாது போன்ற தேர்தல் விதிமுறைகளை தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தொடர்ந்து செங்கம் நகர திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
–செங்கம் மா.சரவணக்குமார்.