தி.மு.க.–காங்கிரஸ் தொகுதி பங்கீடு தோல்வியில் முடிந்தது!  

காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. இன்று முடிவு செய்தது. காங்கிரஸ் கட்சியில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம் ஏற்படுத்தியுள்ளது.

inc

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான அந்த குழுவில் K.கோபிநாத், K.V.தங்கபாலு, M.கிருஷ்ணசாமி, D.யசோதா, திருநாவுக்கரசர், தனுஷ்கோடி ஆதித்தன், A.P.C.V.சண்முகம் ஆகிய 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளாரும், முன்னாள் மத்திய அமைச்சமான முகுல் வாஸ்னிக் ஆகியோர் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் இருவருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், தங்கபாலு, யசோதா, கோபிநாத், அகில இந்திய மகளிர் அணி செயலாளர் ஹசீனா சையத், தமிழக மகளிர் அணி தலைவி ஜான்சிராணி, மாவட்ட தலைவர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஷ்யம், ராயபுரம் மனோ, தாம்பரம் ரூபி மனோகரன் உள்பட ஏராளமானோர் வரவேற்பு கொடுத்தனர். பிறகு அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து நேராக கோபாலபுரத்துக்கு வந்தனர்.

KA MEET MKKA MEET MK2 KA MEET MK1

தி.மு.க. தலைவர் கருணாநிதியை 11.15 மணிக்கு சந்தித்து பேசினார்கள். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, இளங்கோவன், கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக அரசியல் களத்தின் தற்போதைய சூழ்நிலை பற்றி விவாதித்த அவர்கள், முதலில் தேர்தல் வியூகம் பற்றி பேசினார்கள். பிறகு தி.மு.க.–காங்கிரஸ் கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு பற்றி விரிவாக பேசினார்கள்.

கடந்த 2011–ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. 2011–ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்ததால், காங்கிரஸ் மூத்த தலைவர்களின் நெருக்கடிக்கு தி.மு.க. சற்று வளைந்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால், தற்போது அத்தகைய நிர்ப்பந்தமான சூழ்நிலை எதுவும் தி.மு.க.வுக்கு இல்லை. மேலும், ஜி.கே.வாசன் தலைமையில் ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ என்ற பெயரில் காங்கிரஸ் பிளவுப்பட்டு விட்டதால். தமிழகத்தில் காங்கிரஸ் செல்லாக் காசாக ஆகிவிட்டது.

எனவே, முன்பு போல அதிக தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது என்று ஏற்கனவே தி.மு.க. தலைவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டனர்.

இந்த யதார்த்தத்தை நன்கு உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் 40 முதல் 50 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு தி.மு.க. தலைவர்களிடம் தெரிவித்தனர். 

ஆனால், காங்கிரசுக்கு 25 முதல் 35 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் கூறி வருகின்றனர்.

2006, 2011–ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் மிக குறைந்த தொகுதிகளில் தி.மு.க. போட்டியிட்டதால் தொண்டர்களிடம் அதிருப்தி நிலவியது.

எனவே, இந்த தடவை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது. ஆகையால் 35 தொகுதிகளை பெற்று கொள்ளுமாறு தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் எதிர்பார்க்கும் தொகுதிகள் கிடைக்குமா? என்பதில் இழுபறி உள்ளது.

இது பற்றி கருணாநிதியும்–குலாம்நபி ஆசாத்தும் 1.15 மணி நேரம் விவாதித்தும் முடிவுக்கு வர இயலவில்லை.

இதைத் தொடர்ந்து தி.மு.க.–காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீர்வு எட்டாமல் தோல்வியில் முடிந்தது.

தி.மு.க. கூட்டணியில் இத்தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் இடமும் கிடைக்காது. அவர்கள் கேட்கும் தொகுதிகளும் கிடைக்காது. ஏனென்றால், இப்போதைய சூழலில் தமிழக காங்கிரஸில் தொண்டர்களே யாரும் கிடையாது. எல்லாமே தலைவர்கள்தான். அந்த தலைவர்களுக்குள் ஒற்றுமையும் இல்லை, ஒருமித்தக் கருத்தும் இல்லை. 

எனவே, கருணாநிதி கொடுப்பதை காங்கிரஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தனியாக கடைவிரித்து காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து போட்டியிட வேண்டிய தர்ம சங்கடம் ஏற்படும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com