2016 தமிழக சட்டமன்ற தேர்தல் : பா.ஜ.க.வின் இன்றைய பரிதாப நிலைக்கு என்ன காரணம்?

BJP1BJP

தேர்தல் வந்தால் மட்டும் கூட்டணி கட்சிகளை தேடுவது, தேர்தல் முடிந்து விட்டால் தெனாவெட்டாக பேசுவது, இதுப் போன்ற துரோக நடவடிக்கைகள்தான் தமிழக பா.ஜ.க.வின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து,  தமிழக மக்கள் நலன் சார்ந்த பொதுவானக் கருத்துக்களுக்கு மதிப்பு அளித்திருந்தால், தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு இப்போது இந்த இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது.

தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளில் சபை நாகரிகம் தெரியாமல் காட்டுத்தனமாகக் கத்துவது, தினமும் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு ஏதாவது பரப்பரப்பாக பேசுவது, செல்போனில் தாங்களாகவே மிஸ்டு கால் கொடுத்து விட்டு கோடிக்கணக்கான தொண்டர்களை தங்கள் கட்சியில் உறுப்பினர்களாக சேர்த்து விட்டதாக சுய தம்பட்டம் அடித்து கொள்வது, உப்பு பெறாத விசயத்திற்கெல்லாம் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்பது, விவசாயிகளின் உயிர் நாடியாக இருக்கும் விவசாய நிலங்களை அபகரித்து எரிவாயு குழாய்களை அமைத்து வரும் கெயில் (Gas Authority of India Limited) நிறுவனத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பது, வீட்டு விலங்குகள் பட்டியலில் இருந்த காளைகளை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காட்டு விலங்குகள் பட்டியலில் சேர்த்த போது எப்படி தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி மவுனமாக இருந்தாரோ, அதே போல கண்டும் காணாமல் இருந்துவிட்டு, உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த பிறகும் அதைப் பற்றி எந்த கருத்தும் வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்து விட்டு, காட்டு விலங்குகள் பட்டியலில் இருக்கும் காளைகளை வீட்டு விலங்குகள் பட்டியலில் சேர்க்காமலேயே, தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்து அரசாணையை அரசிதழில் வெளியிட்டு நாடகமாடியது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவும், தமிழகத்தின் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டவும், சட்ட அங்கீகாரம் பெற்ற காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக் குழுவை அமைக்காமல் காங்கிரசை போலவே கள்ள மவுனம் கடைப்பிடித்து தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவது.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த ஆதார் அட்டை திட்டத்தை அப்போது எதிர் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி, இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் காரணமாக பாராளுமன்றத்தையே பலநாட்கள் முடக்கியது.

இத்திட்டத்தின் மூலம் 50 ஆயிரம் கோடி அரசுக்கு விரையம். தனியார் நிறுவனங்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு காங்கிரஸ் பிழைப்பு நடத்துகிறது என்று, பாரதிய ஜனதா கட்சி மூத்தத்தலைவர்கள் அனைவரும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்கள்.

அப்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோதி இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், நரேந்திர மோதி பிரதமராக பதவியேற்றவுடன், ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுகளை  மதிக்காமல், ஆதார் அடையாள அட்டையை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகள் மற்றும் பணபரிமாற்றங்கள், எரிபொருள் மானியம், 100 நாள் வேலைத்திட்டம், வாக்காளர் அடையாள அட்டை, ரெயில்வே முன்பதிவு, முதியோர், விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவிதொகை, ரேஷன்கடை மற்றும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கும் “ஆதார் அடையாள அட்டை” அவசியம் என்று அப்பாவி மக்களை அலையவிட்டனர்.

ஆதார் அடையாள அட்டைக்காக இந்திய மக்கள்  இன்று வரை பட்டு வரும் கஷ்டங்களை, இங்கு வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இந்த ஒரு காரணத்திற்காகவே, நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் அல்ல என்று, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த வழக்குகளில் ஆதார் அடையாள அட்டைக்காக குடிமக்களின் கைரேகை, கண்ணின் மணியை பதிவு செய்வது என்பது தனிநபர் உரிமையை பறிக்கும் செயல் என கூறப்பட்டுள்ளது.

அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை அவசியம் அல்ல என்று, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தும் கூட, நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஆதார் அட்டைக்காக மக்களை தொடர்ந்து அலைகழித்து வருகிறது.

மேலும், உச்சப்பட்சமாக ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து அளிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதற்கு நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு அவமானங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது.

ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் ஆதார் அட்டையை பயன்படுத்துவதில் இருந்து விடுபடுவதற்கு சுதந்திரம் வேண்டும். ஆனால், தற்போதைய மசோதாவில் அது இல்லை என்பதுதான் வேதனையான விசியம்.

ஆதார் அட்டைக்காக காட்டும் ஆர்வத்தை, கெயில் (Gas Authority of India Limited) நிறுவன வழக்கிலோ, ஜல்லிக்கட்டு காளைகள் வழக்கிலோ, காவிரி நதிநீர் வழக்கிலோ, கச்சத்தீவு வழக்கிலோ மத்திய அரசு நேர்மையான முறையில் தீவிரம் காட்டியிருந்தால், தமிழக மக்களும், தமிழக அரசியல் கட்சிகளும் தானாகவே முன் வந்து பாரதிய ஜனதா கட்சியை தலையில் தூக்கி  வைத்துக் கொண்டாடியிருப்பார்கள்.

ஆனால், அதற்கான தகுதியை பாரதிய ஜனதா கட்சி இன்று வரை வளர்த்து கொள்ளவில்லை.துதான் பா.ஜ.க.வின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம்.

முந்தைய சோனியா காந்தி தலைமையிலான மன்மோகன் சிங் அரசாங்கத்திற்கும், நரேந்திர மோதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கும் கொள்கையளவில் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை.

எனவே, எதிரிகளின் செயல்பாட்டையும், எதிர்கட்சியினரின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனிப்பதற்கு எந்த அளவிற்கு உளவுதுறையினருக்கு நீங்கள் உரிமை அளித்துள்ளீர்களோ, அதில் ஒரு சதவீதமாவது நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிலையையும் உன்னிப்பாக கவனிப்பதற்கு உத்தரவிடுங்கள். அவற்றை தொடர்ந்து உற்று நோக்குங்கள், மக்களின் உண்மை நிலை புரியும். ஏனென்றால், பேச்சு பெரிதுதான்; ஆனால், செயல் அதை விட பெரிது.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com