மக்கள் நலக்கூட்டணியின் வழக்கறிஞர்கள் மாநில மாநாடு இன்று திருச்சியில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு வக்கீல் தேவதாஸ் தலைமை தாங்கினார். சி.பி.ஐ. தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் தொடக்க உரையாற்றினார்.
இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க. மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் பன்னீர், துணை செயலாளர் பாலாஜி, ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாநாட்டில் பங்கேற்க வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த நேரத்தில் எனக்கு தி.மு.க.வில் இருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள், மிக்க மகிழ்ச்சி. நேற்று நான் கூறியதை வாபஸ் வாங்கா விட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடருவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
2006 சட்டமன்ற தேர்தலில் இதேபோன்று நான் ஊழல் குற்றச்சாட்டு கூறியதற்கு என் மீது ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கும் 10 வருடமாக நடந்து வருகிறது. ஆனால் வழக்கு தொடர்ந்த அவர்கள் கோர்ட்டுக்கு வரமாட்டேன் என்கிறார்கள்.
இதேபோன்று ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் கேட்ட கேள்விக்கு என் மீது தேசத்துரோக வழக்கு போட்டார்கள். இதில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டார்கள். இதை நிரூபித்தால் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும். ஆயுள் தண்டனை விதித்தால் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன். அது தற்போது உச்ச நீதிமன்றம் சென்று முடிந்து இருக்கிறது.
எதையும் வாபஸ் பெறும் எண்ணம் இல்லை. இதேபோன்று பொடா கோர்ட்டில் விடுதலை புலிகளை ஆதரிக்கிறேன் என்று நான் கூறியபோது, நீதிபதி குறுக்கிட்டு நன்றாக யோசித்து சொல்லுங்கள் என்றார். அதற்கு நான், விடுதலை புலிகளை நேற்றும், இன்றும், என்றும் ஆதரிப்பேன் என்று கூறினேன். நான் எதிலிருந்தும் வாபஸ் வாங்கியது இல்லை.
இப்போது எனக்கு நோட்டீஸ் அனுப்பியவர்களை பார்த்து நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கருணாநிதி நினைத்திருக்கமாட்டார். அவருக்கு தெரிந்து இருக்காது. ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகளை பணம் தருகிறோம், எம்.எல்.ஏ. சீட் தருகிறோம் என்று கூறி இழுத்தார்கள். இந்த விசயம் கருணாநிதிக்கு தெரியாமல் தான் நடந்திருக்கும் என்றேன்.
அதன் பிறகு கருணாநிதியை தொந்தரவு செய்து பதில் பேச வைத்தார்கள். அவர் அதற்கு எனக்கு தெரியாமல் கட்சி நடந்திருக்குமா? என்று பிறகு சொன்னார். இப்போதும் நோட்டீஸ் அனுப்பியது கருணாநிதிக்கு தெரிந்திருக்காது. இதிலும் பின்னர் கருணாநிதியை விட்டு பிறகு பேச வைப்பார்கள். 2ஜி அலை வரிசை ஊழல் வழக்கில் கனிமொழியை பலிகடா ஆக்கிவிட்டார்கள். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் பதுங்கி கொண்டார்கள்.
ஸ்டாலின், சாதிக் பாட்ஷா சந்திப்பின்போது நடந்தது என்ன? சாதிக் பாட்ஷா மரணத்தின் பின்னணியில் நடந்தது என்ன? பிரதமரை பார்த்து கேட்கிறேன். இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். சாதிக் பாட்ஷா மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம். சேராத இடம் தேடி சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா… என்ற வாசகத்துடன் அவரது குடும்பத்தினர் நோட்டீஸ் அச்சடித்து உள்ளார்கள். இதற்கு வழக்கு போட தைரியம் இல்லாத ஸ்டாலின், எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இவ்வளவு சீட் கொடுக்கிறார்கள், பணம் கொடுக்க முயற்சிக்கிறார்கள் என்று செய்தித் தாள்களில் வந்தவற்றைத் தான் நான் கூறினேன். இதற்கு எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
2ஜி வழக்கின் பின்னணியில் இருந்தது மு.க.ஸ்டாலின் என்று உறுதியாக கூறுகிறேன். இதற்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். இவ்வாறு வைகோ கூறினார்.
-கே.பி.சுகுமார்.