தமிழகத்தை அதிர வைத்திருக்கும் மதுரை மாவட்ட கிரானைட் கொள்ளை பிரச்சனையில், 29.03.2016 அன்று வெளிவந்த மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதியின் தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக அனைத்து தரப்பினரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதி, பி.ஆர்.பி. கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஆர்.பழனிசாமி உள்ளிட்ட மூவரை விடுதலை செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கு போட்ட அன்சுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ். மற்றும் இரண்டு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீதும் மோசடி செய்ததாகக் கூறி கிரிமினல் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இது நீதிதுறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இம்மாதம் 24-ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றம், கிரானைட் கொள்ளை வழக்குகளில் தம் உத்தரவை மீறி செயல்படுவதாக, இந்த நடுவரின் பேரில் குற்றம்சாட்டி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இவர் மீது தொடரப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
பழனிசாமி உள்ளிட்டவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், அனைத்தையும் அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல் அளித்தும், அதை மீறி, பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலேயே மிகச் சிறிய வழக்கை மட்டும் எடுத்து நடத்தி, மற்றவற்றை நிலுவையில் தன் நீதிமன்றத்திலேயே மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதி வைத்துக்கொண்டிருக்கிறார். அந்த வழக்கில் தான் தற்போதைய உத்தரவை வழங்கியிருக்கிறார்.
ஏற்கனவே 2015 ஆகஸ்டில், சட்டவிரோத கிரானைட் வெட்டி எடுக்கும் பிரச்சனையுடன் தொடர்புடையதாக, மேலவளவு காவல்துறையினர், பழனிச்சாமி உள்ளிட்ட 9 பேர் மீது போட்டிருந்த மோசடி மற்றும் போலி கையெழுத்து வழக்கில், முதல் கட்ட ஆதாரம் கூட இல்லை என்று கூறி அவர்கள் அத்தனை பேரையும் விடுவித்தவர் இதே நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதி தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வருவாய்த்துறை பதிவேடுகளில் போதுமான ஆதாரம் இருந்தும் நீதித்துறை நடுவர் மகேந்திர பூபதி அதைக் கணக்கில் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, இந்த உத்தரவை எதிர்த்து, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அப்போதே மேல் முறையீட்டுக்குப் போயிருக்கிறார்.
2012 ஆட்சியராக வந்த அன்சுல் மிஸ்ரா, ஆகஸ்ட் 2012ல் 18 சிறப்பு குழுக்களை அமைத்து ஆய்வு செய்து, 94 குவாரிகளை மூடி, சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்கினார். 2013-ல் அவர் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் ரூ.10,000 கோடி அளவுக்கு சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக தமிழ்நாடு கனிமவள நிறுவன (டாமின்) உயர்மட்ட நிர்வாகமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்தது.
உதாரணமாக அரசு டாமினுக்கு அளிக்கும் குத்தகையை, அரசின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, தனியாருக்கு உப குத்தகை அல்லது குத்தகை மாற்றம் செய்யக் கூடாது என்ற விதி இருக்கிறது.
ஆனால் டாமின், அத்தகைய அனுமதி பெறாமலேயே, தன்னிடம் போதுமான உபகரணங்கள் இல்லை என்று காரணம் சொல்லி, தனியாருக்கு உப குத்தகைக்கு விட்டிருக்கிறது. குத்தகைக்கு விடும் இடங்களில் கிடைக்கக் கூடிய கிரானைட் அளவை மிகவும் குறைத்துக் காட்டி, இதன் மீது ஒரு சிறு தொகையை மட்டும் கட்டணமாகப் பெற்று வந்திருக்கிறது. பி.ஆர்.பி. போன்ற நிறுவனம், பெரும் அளவு கிரானைட்டை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்து, அதை விற்று பிரம்மாண்ட லாபம் சம்பாதிப்பதற்கான சூழலை டாமின் நிறுவனத்தின் நடவடிக்கை உருவாக்கியிருக்கிறது. இது சம்மந்தமாக டாமின் அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பழனிச்சாமியை விடுவித்த நீதிபதி மகேந்திர பூபதியிடம் 2 நீதிபதிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com